Published : 16 Feb 2020 08:28 AM
Last Updated : 16 Feb 2020 08:28 AM

70 சதவீதம் உற்பத்தி குறைந்தது: அரசின் கருணைக்கு காத்திருக்கும் பம்ப்செட் உற்பத்தியாளர்கள்

கோவையில் தயாரிக்கப்படும் மோட்டார் பம்ப்செட்டுகள்.

கோவை

பல்வேறு காரணங்களால் கோவையின் அடையாளங்களில் ஒன்றானமோட்டார் பம்ப்செட் உற்பத்திசுமார் 70 சதவீதம் அளவுக்குகுறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க அரசு உதவ வேண்டுமெனபம்ப்செட் உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அரைஹெச்.பி. முதல் 20 ஹெச்.பி.வரையிலான மோட்டார் பம்ப்செட்டுகள் சிறு, குறு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் 500 ஹெச்.பி. வரையிலான பம்ப்செட்டுகளை தயாரிக்கின்றன.

கோவையில் ஏறத்தாழ 3 ஆயிரம் சிறு, குறு மோட்டார் பம்ப்செட் நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த தொழிற்கூடங்களில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ரூ.2 ஆயிரம்முதல் ரூ.50 ஆயிரம் வரை பம்ப்செட்டுகள் விற்பனையாகின்றன.

இதுகுறித்து கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்கே.மணிராஜ் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: ஒருகாலத்தில் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்ட மோட்டார் பம்ப்செட்டுகளில் 65 சதவீதம் கோவையில்தான் உற்பத்தியாகின. ஆனால், பல்வேறு நெருக்கடிகளால் உற்பத்தி குறைந்து, குஜராத் மாநிலம் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

மோட்டார் பம்ப்செட்டுக்கான உதிரி பாகங்களில் 70 சதவீதம் பெட்ரோலியப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் உதிரி பாகங்களின் விலை அதிகரித்துவிட்டது. அதேபோல,போக்குவரத்து செலவும் கடுமையாக உயர்ந்துள்ளது மூலப் பொருட்கள் கொள்முதலுக்கு18 சதவீதமும், விற்பனைக்கு12 சதவீதமும் வரி விதிக்கப்படுவது உற்பத்தியாளர்களை சிரமத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில், நடப்பு ஆண்டு மோட்டார் பம்ப்செட்டுகளுக்கு போதிய அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. முன்பு உதிரி பாக உற்பத்தியில் மட்டுமே ஈடுபட்டு வந்த குஜராத் நிறுவனங்கள், தற்போது முழுமையான பம்ப்செட் தயாரிப்பதால், கோவை பம்ப்செட் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பம்ப்செட்டுகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறையை அமல்படுத்தியுள்ளன.

இதே நிலை நீடித்தால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். சிறு, குறுந்தொழிற்கூடங்கள் மட்டுமின்றி, நடுத்தரதொழிற்கூடங்களும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

எனவேதான், மத்திய, மாநிலஅரசுகளின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஜாப்ஆர்டர் முறையில் செயல்படும்தொழிற் கூடங்களுக்கான வரிவிதிப்பை முற்றிலும் நீக்கவேண்டும்.

வங்கிக் கடன் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறுந்தொழில்முனைவோர் அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் மோட்டார் பம்ப்செட்டுகளை, சிறு, குறுந்தொழிற்கூடங்களில் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டுமென உத்தரவிட வேண்டும்.

10 ஹெச்.பி. வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்கூடங்களுக்கு ரூ.7 முதல் ரூ.8.50வரை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.4.50-ஆக குறைக்க வேண்டும்.

கோவையில் உள்ள இலவச பம்ப்செட் பரிசோதனைக் கூடத்தைப் புனரமைத்து, இலவசமாக பரிசோதனை செய்து, ஐஎஸ்ஐ முத்திரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசின் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், சிறு, குறு பம்ப்செட் உற்பத்தியாளர்களின் நலன்காக்கும் திட்டங்கள் செயல்படுத்த வேண்டுமென்பதே தொழில்முனைவோர் மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x