Published : 16 Feb 2020 08:04 AM
Last Updated : 16 Feb 2020 08:04 AM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போராட்டத்தில் தடியடி: தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நேற்று 2-வது நாளாக நடந்த போராட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.படம்: க.பரத்

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறுமுஸ்லிம் அமைப்புகள் தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறுஇடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்சிலர், போலீஸார் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடிநடத்தி கலைந்துபோக செய்தனர்.அந்த போராட்டத்தில் பங்கேற்றமுஸ்லிம் ஒருவர் அன்று இரவுஉயிரிழந்தார். அவர் இயற்கையாக மரணமடைந்ததாகவும், அவர்தடியடியில் சிக்கி உயிரிழக்கவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அன்று இரவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் பல சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில் நேற்று காலை,உயிரிழந்தவரின் உடலுடன்முஸ்லிம் அமைப்பினர் வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து, பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில், முஸ்லிம்கள் மீதுபோலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து நேற்று தமிழகம்முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. திருநெல்வேலி மேலப்பாளையம், தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதி, காயல்பட்டினம், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 4 மணி நேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டமும், 4 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றன. திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 1200 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மறியலில் ஈடுபட்டதாக 51 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயற்குழு கூட்டம் சிதம்பரத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அந்த மண்டபத்தை முற்றுகையிட்டு முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்ட முஸ்லிம்கள் 160 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்எல்ஏ பி.வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்று, முஸ்லிம்கள் மீதான தடியடிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தங்கசாலை மணிகூண்டு அருகில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினர். அவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட போலீஸார் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முஸ்லிம்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலர் இ.முஹம்மது செய்தியாளர்களிடம் கூறும்போது

"தடியடிக்கு காரணமான போலீஸார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது" என்றார். இறுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x