Published : 16 Feb 2020 07:58 AM
Last Updated : 16 Feb 2020 07:58 AM

வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்பை சட்டமாக்க மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரி முதல்வர் எழுதிய கடிதம் வெளியீடு: தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார்

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகளை அறிவித்து அதை சட்டமாக்குவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரிய தமிழக முதல்வர் பழனிசாமியின் கடிதத்தை அரசு வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த பிப்.9-ம் தேதி நடைபெற்ற கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகளை பாது காக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார். இதையடுத்து, மறுநாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டெல்லியில், அதிமுக மாநிலங் களவை எம்பிக்களுடன் சென்று, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை சட்டமாக்குவதற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரும் முதல்வர் பழனிசாமியின் கடிதத்தை அளித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘அமைச்சர் ஜெயக்குமார் டெல்லியில் மத்திய அமைச்சர்களிடம் அளித்த, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர் பான கடிதத்தை வெளியிட வேண்டும்’’ என்றார்.

கடிதம் வெளியீடு

இந்நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அந்தக் கடிதத்தை வெளியிட்டார். முதல்வர் பழனிசாமி கடந்த பிப்.10-ம் தேதி மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விவரம்:

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2014-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மீத்தேன் அகழ்வு திட்டங்கள் குறித்த வல்லுநர் குழு, மீத்தேன் திட்டங்களுக்காக டெல்டா பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட 4,266 ஏக்கரில் ஒரு லட்சம் கிலோ லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் கடல்நீர் உட்புகும் நிலை ஏற்படும். வெளியேற்றப்படும் நீரும், அமைக்கப்படும் குழாய்களும் சுற்றுச்சூழலை பாதிக்கும். வாயு எரிவதால், காற்றும் மாசுபடும். போதுமான நிதிப்பயனும் கிடைக்காத இத்திட்டத்தால் சுற்றுச்சூழல், மண்வளம் பாதிக்கும் என தெரிவித்தது. இதன் அடிப்படையில் மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் மாநில அரசுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் ஜெயலலிதா தெரிவித்தார்.

இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, அதை வலியுறுத்துவதன் அடிப்படை காரணங் களை தெரிவிக்க விரும்புகிறேன். காவிரி டெல்டா பகுதிகளில் 28 லட்சம் ஏக்கரில் 33 லட் சத்து 26 ஆயிரம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர தேங் காய், வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும் பயிரிடப்படுகிறது. அதிக அளவில் வெள்ளம், புயல், வறட்சியால் இப்பகுதி பாதிக்கப் படுகிறது.

இப்பகுதி விவசாயம் கிணற்றுப்பாசனத்தை நம்பியிருப்பதால், ஹைட்ரோ கார்பன் திட் டங்கள் நிலத்தடி நீரை கடுமையாக பாதிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்தி னால் பருவகால மாற்றத்தின் விளைவுகளால் இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும். குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளால் நிலம், சுற்றுச்சூழல் பாதிப்புகளுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.

இந்தியாவின் 2-வது பெரிய மாங்குரோவ் காடுகளை கொண்ட முத்துப்பேட்டைக்கும் பாதிப்பு ஏற்படும். இதுதவிர, இப்பகுதியில் தொல்லியல் சார்ந்த கலாச்சார தொன்மைமிக்க தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நவக்கிரக கோயில்கள், வேளாங்கண்ணி தேவாலயம், நாகூர் தர்ஹா போன்றவை உள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் இவற்றுக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மேலும், கடந்த ஜன.16-ம் தேதி வெளியிட்ட சட்டத்திருத்தத்தில் இருந்து, காவிரி டெல்டா பகுதிகளை விடுவிக்க வேண்டும். இதுதவிர, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்பை சட்டமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x