சிஏஏ போராட்டம்; தவறான படத்தை விசாரிக்காமல் போட்டுவிட்டேன்: திமுக எம்பி செந்தில் மன்னிப்பு கோரினார்

சிஏஏ போராட்டம்; தவறான படத்தை விசாரிக்காமல் போட்டுவிட்டேன்: திமுக எம்பி செந்தில் மன்னிப்பு கோரினார்

Published on

நேற்று நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் இறந்துபோனதாக சாலை விபத்தில் உயிரிழந்தவர் படத்தை தவறாக ட்விட்டரில் பதிவிட்ட திமுக எம்பி செந்தில் தான் தவறாக பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் தடியடியால் ஒரு முதியவர் உயிரிழந்ததாக தகவல் பரபரப்பப்பட்டது. இதை போலீஸ் தரப்பு மறுத்தது.

ஆனால் இந்த விவகாரம் தீயாய் பரவி தமிழகம் முழுதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் காவல் ஆணையர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதில் பிரச்சினை சுமூகமாக முடிந்தது.

இந்நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில் நேற்று மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கிடைத்த தவறான தகவலை உண்மை என நம்பி சிஏஏ போராட்டத்தில் ஒருவர் இறந்தார் என திருவாரூர் அருகே சாலைவிபத்தில் ரத்தக்காயத்துடன் கிடக்கும் இளைஞர் ஒருவர் படத்தை பதிவிட்டு அதிமுக அரசும், பாமக நிறுவனர் ராமதாஸும் என்ன சொல்லப்போகிறார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கீழே பலரும் அவரைக்கண்டித்திருந்தனர். தவறான தகவலை பரப்புவதே உங்கள் கட்சியினருக்கு வாடிக்கை எனக்கண்டித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸார் உயிரிழந்த பெரியவர் படத்தை வெளியிட்டு அவர் இந்த போராட்டத்தில் இறக்கவில்லை என விளக்கம் அளித்து வதந்தியை பரப்ப வேண்டாம். எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதாலும், நண்பர்கள் சிலர் உண்மையை எடுத்துச் சொன்னதாலும் தவறை உணர்ந்த திமுக எம்பி செந்தில் தனது தவறுக்காக மன்னிப்பு கோரி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“நான் பிரசுரித்த புகைப்படத்தில் இருக்கும் நபர் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவரல்ல, அவர் சாலை விபத்தில் சிக்கியவர் என்பதை எனது நண்பர்களும், நலம் விரும்பிகளும் சுட்டிக்காட்டியதால் தெரிந்துக்கொண்டேன்.

நான் இதை பதிவு செய்ததற்காக உளமாற மன்னிப்பு கோருகிறேன். வருங்காலங்களில் இதுபோன்ற உறுதி செய்யப்படாத, வரும் தகவல்களை பதிவு செய்வதற்கு முன் இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பேன்”.

அதை அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் நல்ல விஷயம் என பாராட்டியுள்ளார். பலர் பாராட்டியுள்ளர், சிலர் விமர்சித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in