Published : 15 Feb 2020 09:28 PM
Last Updated : 15 Feb 2020 09:28 PM

‘பிள்ளைகள் தலையில் கடன்சுமை – பெற்றோருக்கு பொங்கல் பரிசு’- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சாடல்

நிதி மேலாண்மையில் தென் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்பு இருந்த தமிழகம், இன்று உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் நிலைக்குச் சரியத் தொடங்கி இருக்கிறது என திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அவர் முன்கூட்டியே வெளியிட்ட ஆய்வறிக்கை:

நிதி மேலாண்மை மற்றும் பொருளாதாரம் தொடர்பான எந்தவொரு புத்தகத்தை எடுத்துப் படித்தாலும், தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை எந்தநிலையில் சீரழிந்துள்ளது என்பதை எளிதில் அறிந்துகொள்ள முடியும். அதேபோல, ரிசர்வ் வங்கி அறிக்கையின் மூலம் இரண்டு முக்கியமான கருத்துக்களை நாம் பெறலாம்.

முதல் கருத்து, ஒரு மாநிலம், முதலீடுகளில் அதிக நிதியைப் பயன்படுத்தினால், அதனுடைய எதிர்காலம் சிறப்பானதாக அமையும். ’முதலீடுகளை குறைத்துவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி சரிவது உறுதி’ என்பது பொருளாதாரத்தின் அடிப்படைக் கொள்கை. அடுத்து இரண்டாவதாக, கடனுக்கான வட்டியாக அதிக நிதி செலவிடப்பட்டால், மாநில மக்களுக்கு எந்தப் பயனும், திட்டமும் முறையாக கிடைக்காது. இந்தப் போக்கு நீடிக்குமானால் மக்களின் வளர்ச்சி குன்றி, வருமானம் ஈட்ட முடியாத நிலை உருவாகி, மாநில அரசின் வரி வருவாயும் வீழ்ச்சியடையும்.

இந்த அடிப்படைக் கொள்கைகளை மத்திய - மாநில அரசுகள் முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் நிதி நிலை மோசமடைகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில், FRBM (FINANCIAL RESPONSIBILITY AND BUDGET MANAGEMENT ACT) என்ற சட்டம் உருவாக்கப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் அதிகப்படியான நிதிப்பகிர்வை பெற வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற ஒரு சட்டத்தை மாநிலத்திலும் உருவாக்கி, சிறந்த நிதி மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி, கடந்த 2003-ம் ஆண்டு, ’தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டம் உருவாக்கப்பட்டது (FRA 2003). அதில் உள்ள கோட்பாடுகளில், ’வருவாய்ப் பற்றாக்குறை இருக்கவே கூடாது’ என்பதே முதன்மையானது. இரண்டாவது, நிதிப் பற்றாக்குறை என்பது மாநில மொத்த உற்பத்தியில் 3%க்கு குறைவாக இருக்க வேண்டும். கடன் அளவு மொத்த உற்பத்தியில் 25%-கும் குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், ஒரு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, அதற்கு முந்தைய இரு ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகளையும், நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையையும், அடுத்து வரக்கூடிய இரு ஆண்டுகளுக்கான நிதிநிலை திட்டங்களையும் (medium term fiscal plan) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வரையறை நிர்ணயித்துள்ளது.

எனவே, ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் மாநில மற்றும் மத்திய வருவாயாக உள்ளது என்பதிலிருந்தும், மொத்த உற்பத்தியில் எத்தனை சதவிகிதம் அரசாங்கத்திற்கு வருவாயாக கிடைக்கிறது என்பதிலிருந்தும், சிறந்த நிதி மேலாண்மையை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

அதன்படி, அரசாங்கம் அளித்துள்ள புள்ளி விவரங்கள் மற்றும் தணிக்கைக்குழு (CAG) அளித்துள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கிடைத்த தகவல்களை ஆய்வுசெய்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

திமுக ஆட்சியில் உன்னத வளர்ச்சி:

தலைவர் கலைஞர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் இன்றைய அதிமுக அரசு ஆகிய 3 ஆட்சிக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி தொடர்பான செயல்பாடுகளை ஒப்பிட்டுக்காட்டி, நிதி மேலாண்மை குறித்து விளக்க விரும்புகிறேன். காரணம், மாநிலத்தின் வருவாய், மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் இருந்து குறைந்து கொண்டு வருவது நம்முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை.

பொதுவாக கடன் வாங்குவது, மின்னுற்பத்தி, குடிநீர், நெடுஞ்சாலை, துறைமுகம் போன்ற தொழில்துறைகளில் முதலீடு செய்தல், போன்றவற்றில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும், மாநில அரசால் திறமையாக செயல்படமுடியும். இதன்மூலம், வேலைவாய்ப்புகள் பெருகி, அரசாங்கத்துக்கு நேரடி வருமானமும், மறைமுக வருமானமும் பெருகும். மேற்குறிப்பிட்ட 3 ஆட்சிக்காலங்களில் வழங்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி ஆய்வு மேற்கொண்டதில்,

தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிகாலத்தில் மாநிலத்தின் மொத்த வருவாய் 14.3% ஆக இருந்தது. இதில் 3.8% மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட வருவாய்ப் பங்கு. அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் மொத்த வருவாய் 12.8% ஆக குறைந்துவிட்டது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்த வருவாய் அளவு 10.5% ஆக சரிந்து விட்டது. இதில் மத்திய அரசின் பங்கான 3.2% வருவாய் போக, மாநில வருவாய் 7.3% ஆக குறைந்திருக்கிறது.

மேலும் 14வது நிதிக்குழுவின் பரிந்துரையால், தமிழகத்துக்கான நிதிப்பகிர்வு மதிப்பீடு 4.9% லிருந்து 4.06% என குறைக்கப்பட்டதாலும், மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய GST இழப்பீடு, மான்யம் போன்ற நிதிகளை அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாலும், மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி 3.2% ஆக குறைந்துவிட்டது.

இதுபோல் நிதிப்பங்கீடு குறையும் என்பதால் தான் அம்மையார் ஜெயலலிதா ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ஜிஎஸ்டி-க்கு ஆதரவளித்து மாநில வருவாய் இழப்புக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளார்.

மாநில உற்பத்தி வீழ்ச்சியால் மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தம்:

2017-18 ஆம் ஆண்டுக்கான CAG அறிக்கையில் வெளியான, 14வது நிதி ஆணையப் பரிந்துரையில், தமிழகத்தின் சொந்த வருவாய் ரூ.1,46,893 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரூ.93,737 கோடி மட்டுமே மாநிலத்தின் சொந்த வருவாயாக வந்திருக்கிறது. இதன்மூலம், கிட்டத்தட்ட ரூ.53,000 கோடியை தமிழக அரசு இழந்திருக்கிறது. இந்த மிகப்பெரிய பற்றாக்குறையை வைத்துக்கொண்டு, மக்கள் நல திட்டங்களுக்கு எப்படி மாநில அரசு செலவு செய்ய முடியும்?

எனவே, மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்வதை அதிமுக அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. உதாரணமாக மாணவ – மாணவியருக்கு சைக்கிள், லேப்டாப், சத்துணவு போன்றவற்றிற்கு செலவு செய்திருந்தால், அதன் மூலமாக மக்கள் பயனடைந்து, பொருளாதார வளர்ச்சி பெற்று, வருமானம் ஈட்டி, வரி செலுத்துவார்கள்.

ஆனால், தற்போது மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்வது குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு ஒரு அரசாக இருந்தாலும் ஊதியம், ஓய்வூதியம், வட்டி போன்றவற்றிற்கு கட்டாயமாக செலவு செய்தாக வேண்டும். எனவே, அரசாங்கம் கொண்டுவரும் மற்ற திட்டங்கள் என்ன என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

தலைவர் கலைஞர் ஆட்சியில், மொத்த உற்பத்தியில் 14.1% மக்களுக்காக ஆண்டுதோறும் செலவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 11.8% மட்டுமே செலவு செய்யப்படுகிறது. இந்த 2.5% வேறுபாடு என்பது மொத்த உற்பத்தியில் சுமார் ரூ.42,000 கோடி ஆகும். இதன்படி, மக்களுக்கு சென்றடைந்திருக்க வேண்டிய ரூ.42,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையவில்லை.

அதேபோல, திமுக ஆட்சிக்காலத்தில் உபரி நிதி இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் வருவாய்ப் பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 0.26% ஆக குறைந்தது. தற்போது, மொத்த உற்பத்தியில் 1.31% வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

அதாவது, தலைவர் கலைஞர் ஆட்சிக்குப் பிறகு, மொத்த உற்பத்தியில் 4% வருமானம் குறைந்துவிட்டது. இன்றைய நிலையில், தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.17 லட்சம் கோடி, இதில் 4% என்பது ரூ.68,000 கோடி. எனில், இத்தனை ஆயிரம் கோடி உற்பத்தியை இழந்து, பற்றாக்குறை அதிகரித்த ஒரு மாநிலம் எப்படி நிதி மேலாண்மையில் சிறந்ததாக திகழும்?

முதலீடு செய்யாத அரசு வீழும்:

தலைவர் கலைஞர் ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறை என்பதே இல்லாமல், மாநில வருவாய் ஆண்டுதோறும் 15.8% ஆக வளர்ந்தது. மேலும், முதலீடு ஆண்டுதோறும் 27.1% வளர்ச்சி பெற்று, மாநில மொத்த உற்பத்தியில் 2.5% ஆக இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மொத்த உற்பத்தியில் 2% ஆக முதலீடு குறைந்துள்ளது.

அதிலும், UDAY மின்திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தியதால், TNEB-யின் ரூ.20,000 கோடி கடனை, நிதிநிலைக் கணக்கில் முதலீடாக காட்டியுள்ளனர். இதனை நீக்கினால், முதலீடு என்பது மேலும் குறைந்து 1.5% ஆக குறைகிறது. மேலும், மாநில வருவாய் ஆண்டுதோறும் 10.4% குறைந்து, முதலீடு 5% ஆக குறைந்துவிட்டது.

அதுமட்டுமின்றி, தலைவர் கலைஞர் ஆட்சியில், உலக பொருளாதார மந்தநிலை இருந்தபோதும், அன்றைய ரூபாயின் மதிப்பில், மாநிலத்தின் மொத்த உற்பத்தி 17.2% இருந்தது, மறைந்த முதலவர் ஜெயலலிதா ஆட்சியில் 18.5% ஆக இருந்தது. தற்போது, மாநில மொத்த உற்பத்தி 9.6% குறைந்துள்ளது.

எனவே, முதலீடுகளை குறைத்து, மாநில உற்பத்தியை குறைக்கும் ஒரு மாநிலம், எதிர்காலத்தில் எப்படி வளர்ச்சியடையும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரிடம் நாம் முன்வைக்கும் கேள்வி என்னவெனில், வளர்ச்சியை மீட்டெடுக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும், நீங்கள் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

வட்டி செலுத்தவே கடன் வாங்கும் அதிமுக அரசு:

தலைவர் கலைஞர் ஆட்சியில் ஆண்டுக்கு 13% இருந்த கடனுக்கான வட்டி விகிதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 16.7% ஆக உயர்ந்தது. தற்போது 17.4% ஆக அதிகரித்துவிட்டது. மேலும், தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில், ஒரு ரூபாய் வருமானத்தை ரூ, 2.09 அளவுக்கும், 2006-ல் ஒரு ரூபாயாக இருந்த மக்கள் நல திட்டங்களுக்கான நிதியை 2011-ல் ரூ.2.59 அளவுக்கும் உயர்த்திக் காட்டினார். மேலும் வருமானத்திலிருந்து மட்டுமே செலவுகளை செய்து, உபரி நிதியும் வைத்திருந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற, மாநில வருவாயில் இருந்து 82% நிதியுடன் 18% கடன் வாங்கி செலவிட்டார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி, மக்கள் நலத்திட்டங்களுக்குத் தேவையான மொத்த நிதியையும் கடன் வாங்கியே செலவிடுகிறது. மேலும், உபரிநிதி என்பதே இல்லாமல் சீரழித்து விட்டது.

பிள்ளைகள் மீது கடன் வாங்கி பெற்றோருக்கு பொங்கல் பரிசா?

நம்முடைய பிள்ளைகள் மீது கடனை சுமத்தி, தனது எல்லா திட்டங்களுக்கும் இந்த அரசு செலவிடுவது, அவர்களுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள், மாநில வருவாயில் மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்தது போக, உபரியாக இருந்த 5 பைசா நிதியையும், கடனாகப் பெற்ற ஒரு ரூபாய் நிதியையும் சேர்த்து முதலீடுகளுக்காக செலவு செய்தார். இத்தகைய முதலீடுகளால் கடனுக்கான வட்டியும் குறைந்து, தமிழகமும் வளர்ச்சியுற்றது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள், வாங்குகின்ற ஒரு ரூபாய் கடனில் 85 பைசாவை முதலீடுகளுக்கும், 15 பைசாவை நலத்திட்டங்களுக்கும் செலவிட்டார். அவருடைய நிதி மேலாண்மை பாராட்டும்படியாக இல்லாவிட்டாலும், மிக மோசமானதாக இல்லை. ஆனால், இந்த அதிமுக அரசு வருமானத்திலிருந்து செலவு செய்யாமல், கடன் வாங்கியே எல்லா மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

அதிமுக அரசு புதிதாக வாங்கியுள்ள ஒன்றரை லட்சம் கோடி கடனில் 60% நிதியை முதலீடுகளுக்கும், 22% நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்கும், 18% தொகையை வட்டி செலுத்தவும் பயன்படுத்துகிறார்கள். இதுதான் திறமையான நிதி மேலாண்மையா?

2011ஆம் ஆண்டு நிதியாண்டின் இறுதியில் மொத்தக்கடன் ஒரு லட்சம் கோடி. இதற்கான வட்டி ரூ.8000 கோடி. அதன்பிறகு, அதிமுக ஆட்சி வந்தபிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறக்கும் தருவாயில், தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 2 லட்சம் கோடி. அதற்கான வட்டியாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அரசு ரூ.4 லட்சம் கோடிக்கு மேலாக தமிழகத்தின் கடனை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு வட்டியாக மட்டுமே ரூ.29,000 கோடியை செலுத்தி, அதற்கும் கடன் வாங்கி மாநிலத்தை சீரழித்து விட்டது. நான்கு ஆண்டுகளுக்குள் இந்தளவிற்குக் கடனை அதிகரித்து, முதலீடாவது செய்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை.

2006-11 காலகட்டத்தில் மொத்த உற்பத்தியில் 24.4% ஆக இருந்த கடன் அளவு 19.66% ஆக குறைக்கப்பட்டு, FRA-2003 சட்டத்தின் இலக்கினை எட்டியது தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் 19.66% ஆக இருந்த கடனை மேலும் குறைத்து 17.82% ஆனது. ஆனால், இன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசின் திறமையின்மையால் 17.8% இருந்த கடனை, 3 ஆண்டுகளில் 22.52% ஆக அதிகரித்து FRA-2003 சட்டத்திற்கு நேர்மாறாக செயல்படுகிறது.

மேலும், மாநிலத்தின் மொத்த வருவாயில், கடனுக்கான வட்டிவிகிதம் 14.75% இருந்ததை, கலைஞர் அவர்கள் 11.68% ஆக குறைத்தார். பிறகு, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் 14.08% ஆக உயர்ந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசோ, கடனுக்கான வட்டியை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 17% ஆக உயர்த்திவிட்டது.

இதை மாநிலத்தின் சொந்த வருமானத்தின் அடிப்படையில் கணக்கிட்டால், 1 ரூபாய் வருவாயில் 25 பைசா வட்டிக்கு மட்டுமே செலவாகிறது. பொருளாதாரக் கொள்கை அடிப்படையில் பார்த்தால் வட்டிக்கு அதிகம் செலவு செய்யும் மாநிலம் எப்படி வளர்ச்சியினை பெரும்?

மேலும், கடந்தாண்டு மாநில நிதிநிலையை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, கடந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் சுமார் ரூ.45,000 ரூபாயை கடனாக சுமத்தியுள்ளது அதிமுக அரசு.

கடந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை ரூ.19,319 கோடியாக இருக்கும் என்று தெரிவித்த இந்த அரசு, தற்போது நிதிப் பற்றாக்குறை ரூ.23,459 கோடியை எட்டிவிட்டதாக தெரிவித்திருப்பதில் இருந்து, வருவாய்ப் பற்றாக்குறை 21% உயர்ந்துவிட்டதை வெளிப்படுத்துகிறது.­

உண்மைக்குப் புறம்பாக பேசும் நிதியமைச்சர்:

இத்தகைய மோசமான சூழ்நிலையில் உள்ள தமிழக அரசுக்கு ’சிறந்த நிர்வாகத்துக்கான விருது’ என மத்திய அரசு அறிவித்திருப்பது எதன் அடிப்படையில்? இந்தக் கேள்வியை, திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் எழுப்பிய நேரத்தில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் மத்திய அரசின் சட்டத்தின் கோட்பாட்டுக்கு உட்பட்டுத்தான் இருக்கின்றோம், பொருளாதார வளர்ச்சி - சரிவு என்பதெல்லாம் சாதாரண நிகழ்வுதான். அதைத்தான் செய்கிறோம்” என்று பதிலளித்தார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக நிதியமைச்சராக இருக்கும் அவருக்கு, எந்தச் சட்டம் மத்திய அரசுக்குப் பொருந்தும், எந்தச் சட்டம் மாநில அரசுக்குப் பொருந்தும் என்ற அடிப்படை கூட தெரியாதவராக இருக்கிறார். ’வருவாய்ப் பற்றாக்குறை இருக்கக்கூடாது’, எனும் மாநில அரசின் எஃப்,ஆர்.ஏ-2003 சட்டத்துக்கு மாறாக, 14% வருவாய்ப் பற்றாக்குறையை வைத்துக்கொண்டு, சட்டத்தின் இலக்குக்குள் இருக்கிறேன் என்று அவர் சொல்வது உண்மைக்கு புறம்பானது. உண்மைக்கு புறம்பாக பேசும் நிதியமைச்சரின் previlege committee motion நடவடிக்கை எடுக்கலாமா?

பாஜகவை பின்தொடரும் அதிமுக:

இடைக்கால நிதிநிலை அறிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளாக சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பித்த அதிமுக அரசு இந்தமுறை சமர்ப்பிக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால், எனக்கு மட்டும் அளித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு முறைப்படி மின்னஞ்சலில் அனுப்புவதாக சொன்னார்கள்.

ஆனால் அதுவும் வரவில்லை. தமிழக அரசின் வலைத்தளங்களில் நான்கு நாட்களுக்கு முன்னர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் ஜனநாயத்தின் தூண்களான பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் சென்றடையவில்லை .

தலைவர் கலைஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன், தற்போதைய இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோருடைய நிர்வாகத்திறனை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு திறனும் - கொள்கையும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது இன்றைய நிதிநிலை சீர்கேட்டில் இருந்து தெளிவாகிறது.

அரசியல் தலைவர்களின் திறமையை வைத்துதான் ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும். ஆனால், தற்போதைய அதிமுக அரசு எந்தவொரு பொருளாதாரச் சிந்தனையும் இல்லாமல், பணத்தை வாரி இரைத்து, மாநிலத்தை திவாலாக்கி கொண்டிருக்கிறது.

தில்லியில் பாஜக செய்வது போலவே, இங்கு அதிமுக அரசும் செய்து கொண்டிருக்கிறது. அதாவது, அரசு திட்டங்களுக்கு, நம்முடைய பிள்ளைகளின் மீது கடனை சுமத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும், வருமானத்திலிருந்து செலவு செய்யாமல், மக்களுக்கு தேவையான திட்டங்களுக்கு கடன் வாங்கி செலவு செய்கிறார்கள். இது இவர்களுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறது.

மத்திய பாஜக அரசு, நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக அரசு தமிழக நிதி நிலையை சீர்செய்ய என்ன செய்யப் போகிறது? வருவாய்ப் பற்றாக்குறை, கடன் ஆகியவற்றை அதிகரித்து, நம் பிள்ளைகளின் மீது மிகப்பெரிய கடன்சுமையை சுமத்தி, அதிலிருந்து பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்குகிறது இந்த திறமையற்ற அதிமுக அரசு. இவர்கள் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள். நிதி மேலாண்மையை படுகுழிக்கு தள்ளிவிட்டார்கள்.

இதையெல்லாம் மறைக்க, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, வெளிநாட்டு முதலீடுகள் பெருகியதாக அதிமுக அரசு சொல்வது உண்மைக்கு மாறானது. ஏனெனில், இந்த ஆட்சியில் எந்தவொரு உட்கட்டமைப்பு வளர்ச்சியும் கொண்டுவராத சூழ்நிலையில் முதலீடு பெருகுவது சாத்தியமில்லை.

மேலும், தமிழ்நாட்டில் வேலையின்மையும், வருவாய்ப் பற்றாக்குறையும் அதிகரித்து இருப்பதில் இருந்தே அவர்கள் சொல்வது பொய் என்பது வெளியாகிறது. இது தொடர்பாக கழக தலைவர் தளபதி அவர்கள் பலமுறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டபோதும், அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்த நிலையில், 15வது நிதிக்குழுவில் தமிழகம் தவிர தென் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வை குறைத்துள்ள பாஜக அரசு தமிழகத்திற்கான பங்கை மட்டும் அதிகரித்துள்ளது. இதிலிருந்தே தமிழக அரசின் நிர்வாகத்திறமை எந்தளவுக்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதை உணரலாம்.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால், நிதி மேலாண்மையில் தென் மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்பு இருந்த தமிழகம், இன்று உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் நிலைக்குச் சரியத் தொடங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x