Published : 15 Feb 2020 04:49 PM
Last Updated : 15 Feb 2020 04:49 PM

அனைவரும் அமைதி காப்போம்: முஸ்லிம் லீக் வேண்டுகோள்

வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் அதையொட்டி ஏற்பட்ட நிகழ்வை அடுத்து, பதற்றத்தை ஏற்படுத்தாமல் நமது தொடர் போராட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் லீக் சார்பில் வெளியிட்ட அறிக்கை:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.. முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, சென்னை கூடுதல் ஆணையாளர் ஈஸ்வரமூர்த்தியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்திற்கு காவல்துறை முழு ஆதரவு வழங்கி வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை திசை திருப்பி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

டெல்லி ஷாஹின் பாக் என்பது தனியாருக்குச் சொந்தமான இடம். சென்னை வண்ணாரப்பேட்டை லாலா குண்டா இடம் அனைவருக்கும் பொதுவான இடம். அது தொடர் போராட்டம் நடத்த உகந்த இடம் அல்ல என்பதை காவல்துறை அறிவுறுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கண்டன பொதுக் கூட்டத்திற்கு காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இன்று நடைபெற்ற லாலா குண்டா பகுதி போராட்டத்தில் காவல்துறை லத்தி சார்ஜ் செய்ததில் பலர் காயமடைந்ததாக வந்த செய்தியின் அடிப்படையில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகின்றது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தைத் திசை திருப்புவது போல சம்பவங்கள் நடைபெற்று விடக் கூடாது. லத்தி சார்ஜ் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜாமுஈனுத்தீன் பாகவி ஹஸ்ரத்தை தொடர்புகொண்டு கூடுதல் ஆணையாளரிடம் பேசியதையும், கூடுதல் காவல் துறை ஆணையாளர் கேட்டுக் கொண்டதையும் கூறி கலந்து பேசினோம்.

அதேபோல வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை ஆணையாளர் சமுதாய அமைப்புகளின் தலைவர்களோடு பேசியதில் லத்தி சார்ஜ் செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசி முடிவாகி உள்ளது.

மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர், நாடாளுமன்ற கட்சி கொறடா கே.நவாஸ் கனி ஆகியோர் வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியிலிருந்து சுமுகத் தீர்வு ஏற்படப் பேசி வருகின்றனர்.

எனவே, மேலும் பதற்றத்தை ஏற்படுத்தாமல் நமது தொடர் போராட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனைவரும் அமைதி காக்குமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு இந்திய யூனியன் முஸலிம் லீக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x