Published : 15 Feb 2020 12:51 PM
Last Updated : 15 Feb 2020 12:51 PM

சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: வழக்குகளை திரும்பப் பெறுக; திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

சிஏஏவுக்கு எதிராக சென்னை, வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மாக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (பிப்.15) வெளியிட்ட அறிக்கையில், "குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மக்கள் அறவழியில் கூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.

அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியை அறிந்ததும் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்தவர்களை விடுவித்துள்ளார். இதனால் சாலை மறியல் போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகிய விவரங்களைச் சேகரிக்கச் சொல்லும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகியவை தெரிவித்துள்ள நிலையில் அதனால் எந்த பாதிப்பும் இல்லை, அதை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்று இங்கே உள்ள அதிமுக அரசு கூறி வருகிறது.

அமைதியான அறவழிப் போராட்டங்களைக் காவல்துறையை வைத்து ஒடுக்குவதற்கு முயல்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் நேற்று நடந்த சம்பவம். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனுமதிக்க முடியாது.

கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அமைதி நிலவுவதற்கு அதுதான் உகந்த வழியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்" என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x