

சசிபெருமாள் மரணம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை ஒன்றை நடத்துவதே முறையாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காந்தியவாதி, சசிபெருமாள் இறந்தது தொடர்பாக இந்த ஆட்சியில் காவல் துறையினர் அவர் 174வது பிரிவின் கீழ் (தற்கொலை) செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. இது முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயற்சி செய்கின்ற காரியமாகும்.
எனது அறிக்கையிலும், கழகப் பொருளாளர் ஸ்டாலின் பேட்டியிலும், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அளித்த பேட்டி யிலும் இந்த ஆட்சியினரின் அலட்சியம், தாமதம் காரணமாகத் தான் சசிபெருமாள் இறக்க நேரிட்டது என்பதை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறோம்.
மதிமுக பொதுச் செயலாளர், வைகோ அளித்த பேட்டியிலே கூட மருத்துவமனையிலே சசிபெருமாளின் உடலைப் பார்த்த போது, அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் ரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன என்றும் மூக்கு வழியாகவும் ரத்தம் வந்துள்ளது என்றும், அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக கோபுரத்திலிருந்து அகற்ற முற்பட்டதில், பலத்த ரத்த காயம் ஏற்பட்டு, இருதயம், நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் அடிபட்டு அவர் இறந்திருக்க வேண்டும்.
சசிபெருமாள் மரணம் இயற்கை மரணமல்ல, கொலையால் ஏற்பட்ட மரணமாகத் தான் இருக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டுமென்றும் வைகோ தெரிவித்திருக்கிறார்.
சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம் அளித்த பேட்டியில் அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.
சசிபெருமாள் 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியிலே ஏறி, ஐந்து மணி நேரம் போராடிய வரை காவல் துறையினரும், அரசினரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? காவல்துறையினர் பதிவு செய்திருப்பதைப் போல அது தற்கொலை என்றால், அதனை உரிய நேரத்தில் காவல் துறையினர் தடுப்பதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்க வேண்டாமா?
அதிமுக அரசின் அலட்சியத்தாலும், தாமதத்தாலும் தான் சசிபெருமாள் உயிரிழந்திருக்கிறார். அவருடைய மரணத்திற்கு அதிமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டு, இதுபற்றிய முழுவிவரமும் நாட்டு மக்களுக்குத் தெரிய உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை ஒன்றை நடத்துவதே முறையாக இருக்கும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.