Published : 15 Feb 2020 09:52 AM
Last Updated : 15 Feb 2020 09:52 AM

ஏமாற்றம் அளித்த பட்ஜெட்: விவசாயிகள் கருத்து

தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த பட்ஜெட் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியது: விவசாயிகளின் விளைபொருட் களுக்கான விலை உயர்வு ஏதும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடன் தள்ளுபடி குறித்து ஏதும் அறிவிக் கப்படவில்லை. விவசாயிகள் அதிகம் எதிர்பார்த்த காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஏதும் இடம்பெறவில்லை. டெல்டாவில் இலவச மின்சாரம், புதிய நீர்ப் பாசன திட்டங்கள் குறித்து அறிவிப்பு ஏதும் இல்லை. அதேநேரத்தில் கல்லணைக் கால்வாய் புனரமைப்புக்கு ரூ.300 கோடி என்பது சொற்பமான தொகையாகும். இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கினால் மட்டுமே திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்றார்.

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத்துறைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பழனிவேலு கூறியது:

தமிழக அரசு தொடர்ந்து இலவச திட்டங்களை செயல்படுத்தி வருவதால், கடும் நிதி நெருக்கடியிலும் கடனிலும் உள்ளது.

கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் காவிரி டெல்டா விவசாயிகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவில்லை. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த, அரசு துறையில் புதிய வேலைவாய்புகள் உருவாக்கப்படவில்லை. கல்ல ணைக் கால்வாய் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது.

அரசின் பற்றாக்குறையும் கடன் சுமையும் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் அரசின் வருவாயை உயர்த்துவதற்கு போதிய கவனம் செலுத்தப்படவில்லை. தேர்தல் வருவதால் புதிய வரிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்பது ஐயமே. இது தமிழக மக்களுக்கு இனிப்பும் கசப்பும் கலந்த ஒரு பட்ஜெட் என்றால் அது மிகையாகாது என்றார்.

மூத்த குடிமக்கள் பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கோ.அன்பரசன் கூறியது: இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படாதது வரவேற்க கூடியது. பிரதமரின் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளை அதிகப்படுத்தியது வரவேற்கக்கூடியது. ஆனால், விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் எண்ணிக்கை குறைப்பு, புதிய தொழிற்சாலை, புதிய திட்டங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவை ஏதும் அறிவிக்கப்படவில்லை. அடுத்து வரும் பொதுத் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டாகும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் தம்புசாமி கூறியது:

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 கேட்டு வருகிறோம். ஆனால் பட்ஜெட்டில் இதுதொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை. கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. காவிரி டெல்டாவில் வேளாண்மை சார்ந்த தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து, எந்தவொரு அறிவிப்பும் இல்லை. மூடப்பட்டுள்ள கரும்பு ஆலைகளை திறந்து, கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினரும், நாகை ஒன்றியக்குழு உறுப்பினரு மான சரபோஜி கூறியது:

அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் இது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வர இருப்பதால், விவசாயிகளின் ஒட்டுமொத்த கடனும் ரத்து செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என்று நம்பினோம். ஆனால், அதுபோன்ற அறிவிப்பு எதுவும் இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக, நாகை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகவே விவசாயம் குறிப்பிடும்படியாக இல்லை. குறுவை சாகுபடி 6 ஆண்டுகளாகவே இல்லை. நிகழாண்டு சம்பா சாகுபடி சற்றே கைகொடுத்திருக்கிறது. இருப்பினும் பழைய கடன்களை அடைக்கும் அளவுக்கு வருமானம் இல்லை. எனவே, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வந்திருந்தால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். எனவே, தமிழக முதல்வர் 110-ம் விதியின்கீழ் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்க வேண்டும் என்றார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வந்திருந்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். எனவே, தமிழக முதல்வர் 
110-ம் விதியின்கீழ் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்க வேண்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x