Published : 11 Aug 2015 08:35 PM
Last Updated : 11 Aug 2015 08:35 PM

தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது என அறிவிக்க வேண்டும்: ஆளுநரிடம் விஜயகாந்த் மனு

மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஆளுநர் கே.ரோசய்யாவிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனு அளித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ரோசய்யாவை விஜயகாந்த், இன்று மாலை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளதாவது:

மாநில தகவல் ஆணையத்துக்கான தலைமை தகவல் ஆணையராக கே.ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உளவுத்துறையில் பணியாற்றியதோடு, அரசின் ஆலோசகராகவும் உள்ளார். இதேபோல, ஜெயலலிதாவின் வழக்குகளில் சாதகம் செய்த முன்னாள் நீதிபதி தட்சிணாமூர்த்தியும், அதிமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற முருகனும் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரால் நியமிக்கப்படும் அமைச்சரைக் கொண்ட குழு கூடி கலந்தாலோசித்துதான் மாநில தகவல் ஆணையத்துக்கான ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்று தகவல் உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆனால் தமிழக எதிர்க்கட்சி தலைவரான என்னை கலந்தாலோசிக்காமலேயே மாநில தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது விதிமுறை மீறல் ஆகும். எனவே, அந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்குக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. எனவே மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசை தாங்கள் அறிவுறுத்த வேண்டும். மணல் கொள்ளை தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் கோரி போராட்டம் நடத்தும் என்எல்சி ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மானியக் கோரிக்கை விவாதம் நடத்தவும், பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x