

குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியின்மையை தொடக்க நிலையிலேயே கண்டறிவது குறித்த சர்வதேச கருத்தரங்கத்தை சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
அமர் சேவா சங்கம் சார்பில் நடந்த இந்த சர்வதேச கருத்தரங்கில் ஆளுநர் பேசியதாவது: குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தினுடைய மகிழ்ச்சியான தருணமாக அமைகிறது. குழந்தையின் இயல்பான வளர்ச்சி தவறும்போது அந்த குடும்பத்துக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற சூழல்களில், குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. பெற்றோர் மற்றும் குழந்தை இரு வருமேஉணர்வு, உடல்ரீதியாக அதிர்ச்சியையும் பாதிப்பையும் சந்திக்கின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் தொடக்க நிலையிலேயே அந்த குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் வழிகாட்டல் தேவைப்படுகிறது.
2016-ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையின் அடிப்படையில், உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்ட 5 கோடியே 30 லட்சம் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சமாக உள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய குழந்தைகளுக்கு உதவுவது அவசர தேவையாக உள்ளது. இக்குழுந்தைகளின் உடல், உணர்வு, அறிவாற்றல், சமூக மற்றும் தொலைதொடர்பு திறன்கள் சரியான வளர்ச்சியை அடைய உறுதுணையாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், அமர் சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.சங்கரராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கருத்தரங்கம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.