

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி முஸ்லிம் அமைப்பினர் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து 500-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து மிகுந்த சாலை என்பதால் போலீஸார் அவர்களை தடுக்க முயற்சி செய்தபோது அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் குவிந்த மக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இதைத் தொடர்ந்து கூடுதல் ஆணையர் தினகரன் போராட்டக்காரர்களிடம் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
பேச்சுவார்த்தை
தடியடிக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் நேற்று இரவு முஸ்லிம் அமைப்பினர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் இணை ஆணையர் விஜயகுமார் காயம் அடைந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆணையர் விஸ்வநாதன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த திடீர் போராட்டம் காரணமாக, சென்னை கிண்டி, ஆலந்தூர், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.