

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்ட ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல், ஆதாரமற்ற தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளதாகவும் விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பத்திரிகையாளரான சேகர்ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சேகர்ராமின் அடையாள அட்டையை பரிசோதித்தபோது அதில் டிஎஸ்பி காதர்பாட்சாவின் அடையாள அட்டையும் இருந்தது. இது எவ்வாறு இவரிடம் வந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சேகர்ராம் போலி பத்திரிகையாளரோ என சந்தேகம் எழுப்பினர்.
இதன்தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள போலி பத்திரி கையாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் இதே அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது நீதி பதிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அங்கீ கார அடையாள அட்டை வழங்கு கிறது. ஆனால் இந்த அங்கீகார அட்டை உண்மையான பத்திரிகை யாளர்களுக்கு கிடைப்பதில்லை. போலியான பத்திரிகையாளர்கள் தான் இந்த அங்கீகார அட் டையை வைத்துக்கொண்டு பல் வேறு முறைகேடுகளிலும் ஈடுபடு கின்றனர். இதனால் உண்மை யாக பணிபுரியும் பத்திரிகையாளர் களுக்கும் ஒட்டுமொத்தமாக அவப் பெயர் ஏற்பட்டுவிடுகிறது. சில ஊடகங்களும் இதற்கு துணை போகின்றன.
எனவே தமிழக அரசு வழங்கும் அங்கீகார அடையாள அட்டை உண்மையாக பணிபுரியும் பத்திரி கையாளர்களுக்கு மட்டும் சென்றடையும் வகையில், ஒரு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்த கமிட்டியில் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி, மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். இதன்மூலம் முறைகேடாக அங்கீகார அட்டை வழங்கப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், சென்னையில் உள்ள பிரபலமான பத்திரிகையாளர்கள் சங்கங்களான சென்னை பிரஸ் கிளப், மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, எம்யூஜே ஆகிய சங்கங் களை மட்டுமே தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும். மற்ற சங்கங்களை அங்கீகரிக்கக் கூடாது. இதன்மூலம், போலி பத்திரிகை யாளர்கள் களையெடுக்கப்படுவர்.
சென்னை பிரஸ் கிளப்பில் உள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் பெயர்களைப் பார்க்கும்போது ‘இந்து தமிழ்’, ‘நியூஸ் 7’ போன்ற சில ஊடகங்களை மட்டுமே அங்கீ கரிக்க முடியும். ஹாரிங்டன் போஸ்டுக்கு இங்கு என்ன வேலை எனத் தெரியவில்லை. பிரபலமான ஆங்கில நாளிதழ்களின் பெயர் களையும் காணவில்லை.
அதேபோல ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகளாக செயல்படுவதை தடுக்க வேண்டும். அதேநேரம் அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
அப்போது சென்னை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது என வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் குற்றம் சாட்டினார். அதற்கு சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் பதிலளித்து வாதிடும்போது, ‘‘பிரஸ் கிளப் தேர்தல் கடந்த 1999-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு தேர்தல் நடக்கவில்லை. தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டாலே யாராவது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தலை நிறுத்தி விடுகின்றனர். தற்போது சென்னை பிரஸ் கிளப் தனது உறுப்பினர்களை ஆராய்வதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்து அதன்பிறகு தேர்தலை நடத்து வதற்கும் தயாராக உள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து சென்னை பிரஸ் கிளப் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" என்றார்.
அதேபோல எம்யூஜேவுக்கு கடந்த 2017-ம் ஆண்டும் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டுக்கு கடந்த 2018-ம் ஆண்டும் தேர்தல் நடத்தப் பட்டது என நீதிபதிகளின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள, ‘தற்போதுள்ள நவீன டிஜிட்டல் யுகத்தில் பத்திரிகைகள், செய்தி சேனல்கள் சமுதாயத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இவை உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை நிமிடத்தில் தெரிவித்து விடுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் பலர் டிவிக்களில் வரும் சீரியல்களை பார்ப்பதை தவிர்த்து செய்தி சேனல்களைப் பார்க்க தொடங்கி விட்டனர். எனவே இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் விரிவாக பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.24-ம் தேதக்கு தள்ளி வைத்துள்ளனர்.