மாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்: கமல் சூளுரை

மாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம்: கமல் சூளுரை
Updated on
1 min read

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.57000 கோடி கடன் சுமை, மக்களை மாறி மாறி சுரண்டிவரும் இரண்டு கழகங்களையும் அகற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 17 லட்சத்து 26 ஆயிரத்து 681 கோடியாகவும், கடன் ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடியாகவும் இருந்தது.

தற்போது, நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு குடிமகன் தலையிலும் ரூ.57000 கடன் சுமை உள்ளது என்ற தகவலை தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பட்ஜெட்டை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் திமுகவையும் சேர்த்து விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000/- ரூபாய் கடன் சுமை, இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம். தமிழக வருமானத்தைக் கூட்டுவோம். கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும். மக்கள் நீதி மய்யம்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவுக்கு கீழேயே, மத்திய அரசு பட்ஜெட்டின்போது வாய் திறக்காமல் இப்போது ஏன் திமுகவையும் சேர்த்து விமர்சிக்கிறீர்கள், திமுக 9 ஆண்டுகாலம் ஆட்சியிலேயே இல்லையே என சிலர் கேட்டுள்ளனர்.

இன்னும் சில நெட்டிசன்கள் தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கு, மத்திய பட்ஜெட்டுக்கு இவ்வளவு வேகம் இல்லையே?மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி வரவில்லையாம், அதையும் பேசுங்க.

என தெரிவித்துள்ளனர். சமீபத்தில் திமுக கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலை சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆனால் மக்கள் நீதிமய்யம் கலந்துக்கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in