Published : 14 Feb 2020 07:40 PM
Last Updated : 14 Feb 2020 07:40 PM

தமிழகத்துக்கான நிதிக்குழு ஒதுக்கீட்டில் ஒப்புக்கொண்டப்படி மத்திய அரசு ரூ.44,000 கோடியை தரவில்லை: பட்ஜெட்டில் அதிருப்தி வரிகள்

நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான மொத்தமாக, 74,340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில் அதை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுவிட்டு 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு எதிராக அதிருதியை மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பட்ஜெட் அறிக்கையில் உள்ள வரிகள்:

“ பதினைந்தாவது நிதிக்குழுவின் 2020-21 ஆம் ஆண்டிற்கான முதலாவது அறிக்கையையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிப்பையும் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் நாள் அன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டு முதல் 2025-26 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்திற்கான இறுதி அறிக்கையினை, நிதிக்குழு இந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை 42 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகக் குறைக்குமாறு நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயிலிருந்து இனி பங்கு அளிக்கப்படாது என்பதைக் கருத்தில் கொண்டால், மொத்த நிதிப்பகிர்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறைப்பினால், மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு இருக்காது.

மாநிலங்களுக்கு இடையேயான நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு 4.023 சதவீதத்திலிருந்து 4.189 சதவீதமாக, சிறிய அளவே உயர்ந்துள்ளது. கடந்த சில நிதிக்குழுக்களின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து குறைந்து வந்த போக்கு, இந்த உயர்வினால் மாற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், கடந்தகால அநீதிகளுக்கு, அதிலும் குறிப்பாக பதினான்காவது நிதிக்குழு இழைத்த பாதிப்புகளுக்கு இது முழுமையான பரிகாரமாகாது.

எனவே, தமிழ்நாடு போன்ற சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலத்திற்கு சரியான கணக்கீடுகள் மூலம், போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து மீண்டும் வலியுறுத்துவோம்.

நிதிப்பகிர்விற்குப் பின்னரும் மாநில அரசு வருவாய்ப் பற்றாக்குறையையே சந்திக்கும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட பதினைந்தாவது நிதிக்குழு, தமிழ்நாட்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை மானியமாக 4,025 கோடி ரூபாய் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான, அரசின் மக்கள் நலச் செலவினங்களை, இவ்வறிக்கை ஏற்றுக்கொண்டதையே இது குறிக்கும்.

எனினும், மத்திய அரசின் ‘நடவடிக்கை அறிக்கையில்’, நிதிப்பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பான நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக, 74,340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் இம்மானியத்திற்காக 30,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மானியத் தொகையை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்பதை மாநில அரசு வலியுறுத்தும்.

இவ்வாறு பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x