Published : 14 Feb 2020 06:11 PM
Last Updated : 14 Feb 2020 06:11 PM

3 ஆண்டுகளில் 2295 மதுக்கடைகள் திறப்பு: கண்டனம் தெரிவித்த ஸ்டாலினுக்கு ராமதாஸ் பதில்

3 ஆண்டுகளில் 2295 மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் ராமதாஸ் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகரித்து வருவதை எதிர்த்து கடுமையான போராட்டம் நடந்தது. பொதுமக்கள் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தியதால் மதுவிலக்கு குறித்து அறிவிக்கும் நிலைக்கு திமுக, அதிமுக கட்சிகள் தள்ளப்பட்டன.

2016 தேர்தலில் பிரதான கோஷமே மதுவிலக்காகத்தான் இருந்தது. தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும், ஆண்டுக்கு 500 கடைகள் மூடப்படும், மதுக்கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படும் என அதிமுக அறிவித்தது.

ஜெயலலிதா பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக 500 மதுக்கடைகளை மூடும் கோப்பில் கையெழுத்திட்டார். ஜெயலலிதா மறைந்ததும் முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூடும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டார். அதே காலகட்டத்தில் விபத்துகளைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைப் பாதுகாக்கும் வேலை நடந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடும் நிலை ஏற்பட்டது. ஆனால் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு, மதுக்கடைகள் மூடும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

படிப்படியாக மதுவிலக்கு என்ற கோஷம் அதன்பிறகு பெரிய அளவில் எழவில்லை. இதன் விளைவு கடைகளின் எண்ணிக்கை ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கின. டாஸ்மாக் விற்பனை வருவாயும் ஆண்டுதோறும் கூடிக்கொண்டே போனது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த 3 ஆண்டுகளில் மதுக்கடைகளின் எண்ணிக்கை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பது குறித்து விவரமாக எழுதியுள்ளது. அதன்படி 2017-18-ல் மதுக் கடைகளின் எண்ணிக்கை 2830 ஆகும். 2018-19 ஆண்டுகளில் 1036 கடைகள் அதிகப்படியாக திறக்கப்பட்டு 3866 ஆக உள்ளது.

2019-20ல் இது 1286 கடைகள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 5152 கடைகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது கடைசி மூன்று ஆண்டுகளில் 2,295 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் அரசை லேசாக கண்டித்துள்ளார். அதே நேரம் ஸ்டாலின் நேற்று கண்டித்து பதிவிட்டதன் மீதும் விமர்சனம் வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல.

தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? மு.க.ஸ்டாலின்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக 2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்”. எனப் பதிவிட்டுள்ளார்.

பொதுவாக மதுவிலக்கு கொள்கையில் தீவிரமாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் மதுக்கடைகள் அதிகரித்திருப்பதற்கு வழக்கமாக கடுமையாக கண்டனம் தெரிவிப்பார். ஆனால் இம்முறை லேசாக சுட்டிக்காட்டிவிட்டு, மதுக்கடைகளை திறந்ததை கண்டித்துள்ள ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x