தேவாலயங்கள், மசூதிகள் மறுசீரமைப்புக்கு ஆண்டுதோறும் தலா ரூ.5 கோடி: தமிழக அரசு அறிவிப்பு

தேவாலயங்கள், மசூதிகள் மறுசீரமைப்புக்கு ஆண்டுதோறும் தலா ரூ.5 கோடி: தமிழக அரசு அறிவிப்பு

Published on

தேவாலயங்கள், மசூதிகள் மறுசீரமைப்புக்கு ஆண்டுதோறும் தலா ரூ.5 கோடி வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசும்போது, '' 2019-20 ஆம் ஆண்டில், 3.64 லட்சம் சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 98.66 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் வாயிலாக ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவி பெறுகின்றனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவியை 1 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக அரசு உயர்த்தும். மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், வக்ஃபு வாரியத்திற்கு வழங்கப்படும் வருடாந்திர நிர்வாக மானியம் 2.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 302.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 3.63 லட்சம் மிதிவண்டிகள் 142.84 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 1,348 விடுதிகளில் 85,314 மாணவ மாணவிகள் தங்கியுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 7 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

புதிய விடுதிக் கட்டிடங்களின் கட்டுமானத்திற்காக 2019-20 ஆம் ஆண்டில் 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய அனைத்து விடுதிகளிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை நிறுவப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்காக 1,034.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in