

பறக்கும் ரயில் நிலையங்களில் இரவு நேர காப்பகங்கள் அமைக்கப் பட வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கஸ்தூரிபா காந்தி பறக்கும் ரயில் நிலையத்தில் ஒரு பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பறக்கும் ரயில் நிலையங்கள் பாதுகாப் பானவையா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த ரயில் நிலை யங்களில் மாநகராட்சியின் இரவு நேர காப்பகங்களை அமைப்பதற் கான திட்டம் நிறைவேறினால் அவை பாதுகாப்பானதாகவும், வீடற்றவர் களுக்கு பயனுள்ளதாகவும் அமையும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையில் கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே செல்லும் பறக்கும் ரயில் பாதையில் 18 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற் றில் சிந்தாதிரிப்பேட்டை முதல் பெருங்குடி வரையிலான 14 ரயில் நிலையங்கள் உயர்மட்ட வழித் தடத்தில் உள்ளன. இந்த பெரிய ரயில் நிலையங்களின் தரை தளத் தில் பயணச்சீட்டு அலுவலகத்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் பெரும்பாலான இடம் காலியாகவே உள்ளது. பாலியல் தொழில், மது மற்றும் போதைப் பொருட்கள் உட் கொள்தல் போன்ற செயல்களுக்கு இந்த ரயில் நிலையங்கள் இடம் அளித்து வருகின்றன.
இந்த வழித்தடத்தில் தினமும் பயணம் செய்யும் மகாலட்சுமி இதுபற்றி கூறும்போது, “இந்திரா நகர் ரயில் நிலையத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்ததால், அதிலிருந்த பல வழிகளை அடைத்து ஒரு வழி மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போதும் சமூக விரோத செயல்கள் தொடர்கின்றன. இவ்வளவு பெரிய ரயில் நிலையத் தில் பகலில் கூட தனியாக நடந்து செல்ல பயமாக இருக்கிறது” என்றார்.
பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள இடத்தில் இரவு நேர காப் பகங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு வந்தது. 2011-ம் ஆண்டு மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வின் படி 11 ஆயிரத்து 116 பேர் வீடற்ற வர்களாக இருப்பதாக கண்டறியப் பட்டது. இந்த எண்ணிக்கை தற்போது 15 ஆயிரத்துக்கு மேலாக இருக்கும். சென்னையில் இது வரை 30 காப்பகங்கள் மட்டுமே உள்ளன. புதிய காப்பகங்களை சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் அமைக்க ரயில்வே துறையிடம் மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதி காரி ஒருவர் கூறும்போது, “உச்சநீதி மன்ற உத்தரவுப்படி சென்னையில் மேலும் 40 காப்பகங்கள் அமைக்க வேண்டும். இவற்றில் சிலவற்றை பறக்கும் ரயில் நிலையங்களில் அமைக்க பரிந்துரைத்துள்ளோம். ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. இன்னும் ரயில்வே துறையிடமிருந்து பதில் கிடைக்கவில்லை”என்றார்.