Published : 14 Feb 2020 03:29 PM
Last Updated : 14 Feb 2020 03:29 PM

தரம் உயர்த்தப்படும் விடுதிகள்; ரூ.3 லட்சத்தில் வீடு: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ.4,109 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கு ரூ.4,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் பேசும்போது, ''2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4,109.53 கோடி ரூபாய் மொத்த நிதியில், 2,018.24 கோடி ரூபாய் கல்வித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கான 'பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம்' 49.60 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

ஆதி திராவிடர் மாணவர்களிடையே, கல்லூரி விடுதிகளுக்கான தேவை உயர்ந்து வருகிறது. ஆகையால், 2020-21 ஆம் ஆண்டில் 16.30 கோடி ரூபாய் மதிப்பில் 15 விடுதிகள், கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும். ஆதி திராவிடர் விடுதிகளின் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீடு 6.89 கோடி ரூபாயிலிருந்து 15 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். நபார்டு வங்கியின் உதவியுடன், 106.29 கோடி ரூபாய் மொத்தச் செலவில், 223 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டம் 2020-21 ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி இதனுடன் இணைக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 23,425 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க தமிழ்நாடு ஆதி திராவிடர்
வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து காலநிலைகளுக்குமான வீடுகள், இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சூரிய ஒளி விளக்கு வசதிகள், வீட்டு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து பழங்குடியினக் குடியிருப்புகளில் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும் விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

வீட்டு வசதிக்கான 265 கோடி ரூபாய் உட்பட, 660 கோடி ரூபாயில் விரிவானதொரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்ட நிதியின் கீழ், 2020-21 ஆம் ஆண்டில், வீடுகள் தேவைப்படும் அனைத்து 8,803 குடும்பங்களுக்கும், தலா 3,00,000 ரூபாய் செலவில் வீடுகள் கட்டித் தரப்படும். வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில், ஒரு வீட்டிற்கு கூடுதலாக ஆகும் செலவான 90,000 ரூபாய், பழங்குடியினர் நலத்திற்கான வரவு-செலவு ஒதுக்கீடுகளில் இருந்து சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும். நிதி ஒதுக்கீட்டின் எஞ்சிய 395 கோடி ரூபாய், அணுகு சாலைகள், தெரு விளக்குகள், சூரிய ஒளி விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்காக மூன்று ஆண்டுகளாகப் பிரித்து வழங்கப்படும்.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 210 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் தொடங்கி நிறைவுறா பணிகளுக்கு நடப்பாண்டில் 40 கோடி ரூபாய் தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x