

மதுரை மாநகராட்சியைக் கண்டித்து மேலமாசி வீதியில் மறியலலில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தூத்துக்குடி, சேலம், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றிய வீதிகள், மாரியம்மன் தெப்பக்குளம், பெரியார் பேருந்து நிலையம், வைகை ஆறு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் 14 திட்டங்கள் ரூ.1012 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரையின் 4 மாசி வீதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்கிற பெயரில் மதுரை மாநகராட்சி எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென குழிகளை தோண்டுவதாகவும், பின்னர் பல மாதங்களாக அதை கிடப்பில் போடுவதாகவும் புகார்கள் தொடர்ந்து எழுந்துவந்தன.
இந்நிலையில், மதுரையின் 4 மாசி வீதிகளிலும் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக தோண்டி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இடங்களை சீரமைக்கக் கோரியும், மதுரை மாநகராட்சியைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களும், வணிகர்களும் 100-க்கும் மேற்பட்டோர் நேதாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களில் 70-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.