

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பிரபல மென்பொருள் நிறுவனத்தை, வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று இ-மெயிலில் மிரட்டல் விடுத்த பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சாதுசாயுபு தெருவில் வசிப்பவர் யூசுப் ஷெரிப். இவரது மகன் ரிஸ்வான்(20). இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவரை, சென்னை சைபர் குற்றப் பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
ரிஸ்வான் கைது குறித்து ஆரணி போலீஸார் கூறும்போது, “மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் ஜுலை 30-ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்துக்கு 30-ம் தேதி மதியம் 12.49 மணிக்கு ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில், எங்கள் தலைவன் யாகூப் மேமனை தூக்கில் போட்டதைக் கண்டிக்கும் வகையில், உங்கள் நிறுவனத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களூரு நகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்துக்கும் இ-மெயில் மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து மென்பொருள் நிறுவனம் சார்பில் சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீஸாருக்கு புகார் தரப்பட்டது. செல்போனில் இருந்து இ-மெயில் மூலமாக மிரட்டல் அனுப்பியவர், ஆரணியில் வசிக்கும் ரிஸ்வான் என்பது விசாரணையில் உறுதியானது. அவரை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது மேலும் உறுதி செய்யப்பட்டது” என்றனர்.