

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 620 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்ததுடன் சென்னையைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கொண்டு வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்டெய்னர் லாரியில் கடத்தல்
அப்போது, வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையின் ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை பகுதியில் ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து 2 கார்கள் வந்தன. அந்த கன்டெய்னர் லாரியை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் மறித்து சோதனை செய்தனர். சோதனையில், தலா 2 கிலோ எடையுள்ள 310 பாக்கெட்டுகளில் 620 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், லாரியை வாய்மேடு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக வாய்மேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு, கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து 2 கார்களில் வந்த, வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(54), கோடியக்காடு அய்யப்பன்(35), கோடியக்கரை பரமானந்தம்(35), சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ரமணன்(40), தவமணி(37) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.