Published : 14 Feb 2020 09:20 AM
Last Updated : 14 Feb 2020 09:20 AM

ஆள்மாறட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்கள் வெளியீடு: அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டன

ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்களின் புகைப்படங்களை இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது முதன்முதலில் அம்பலமானது. இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸார், உதித் சூர்யாவையும் அவரது தந்தையையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பலரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது.

மாணவர்கள் பிரவீன், சரவணன், இர்பான் ஆகிய 3 மாணவர்களும், அவர்களது தந்தையும் கைது செய்யப்பட்டனர். மேலும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவிகளும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கைதாகியிருக்கும் மாணவர் களுக்கு பதிலாக வேறு மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், அவர்கள் யார் என்ற விவரத்தை சிபிசிஐடி போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தேடப்படும் 10 பேரின் புகைப்படங்களை, கடந்த 11-ம் தேதி சிபிசிஐடி வெளியிட்டது. மேலும் இவர்களை பற்றி தகவல் தெரிந்தாலோ, நேரில் பாா்த்தாலோ 94438 84395 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிபிசிஐடி தெரி வித்திருந்தது.

இந்நிலையில், அடுத்தகட்டமாக சந்தேகப்படும் 10 பேரின் புகைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில காவல் நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சைபர் கிரைம் உதவியுடன்...

மேலும் தனிப்படை போலீஸார் டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கும் விரைந்துள்ளனர். ஆதார் மையங்களில் இவர்களின் புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார்களா? அவர்களின் புகைப்படம், முகவரி ஆகியவை அதில் உள்ளதா? எனவும் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x