

காவிரிப் படுகையை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது குறித்து திட்டமிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை முதன்மை இடத்துக்கு உயர்த்தி நல்லாட்சி நடைபெறும் மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் பழனிசாமி. காவிரி உரிமை மீட்பு, மின்மிகை மாநிலமாக உருவாக்கியதுடன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி, தமிழகத்தில் நிலத்தடி நீரை உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
இரண்டாவது உலக முதலீட்டா ளர்கள் மாநாடு நடத்தியதோடு வெளிநாடுகளுக்கும் பயணம் செய்து அதன் மூலம் தமிழகத் துக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட சிறப்பு மண்டலமாக அறிவித்து தமிழர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி காட்டியுள்ளார். அவரது சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
அவதூறு செய்ய வேண்டாம்
நல்லதைப் பாராட்ட மனமில்லாமல் போனாலும், அவதூறு செய்யும் குணத்தையாவது ஸ்டாலின் மாற்றிக் கொள்ள வேண்டும்.காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தது ஏமாற்று வேலைஎன்று தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை திட்டமிட்டு மேற்கொண்டுவரும் மு.க.ஸ்டாலினுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.