

இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் உதித் ராஜ் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
உத்தராகண்ட் மாநிலத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ‘‘இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல. ஒரு மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம். இல்லை என்றால் அவர்களை வற்புறுத்த முடியாது’’ என்று தீர்ப்பளித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடஒதுக்கீடே கூடாது என்பது தான் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் கொள்கை. அதனால்தான் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய பாஜக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கு இடஒதுக்கீடு மிகவும் அவசியமானது. எனவே, இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
மத்திய பாஜக ஆட்சியில் தலித்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் தலித்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2015 முதல் 2017 வரை தேசிய எஸ்சி ஆணையத்தில் பதிவான 32 ஆயிரம் வழக்குகளில் 5,300 வழக்குகள் தமிழகத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
அதில் 2 ஆயிரம் வழக்குகள் பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறைகள் தொடர்பானவை. தலித்கள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உதித்ராஜ் கூறினார்.
தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை பாதுகாக்க வலியுறுத்தி வரும் 15-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்’’ என்றார்.