Last Updated : 14 Feb, 2020 08:31 AM

 

Published : 14 Feb 2020 08:31 AM
Last Updated : 14 Feb 2020 08:31 AM

வணிகர்கள் செய்யும் சிறு குற்றங்களை களைய அபராதம் விதிக்க புதிய முறை அமல்: உணவு பாதுகாப்பு துறை மூலம் 2 மாதங்களில் ரூ.9 லட்சம் வசூலிப்பு

வணிகர்கள் செய்யும் சிறிய குற்றங்களை களைய உணவு பாதுகாப்புத் துறை மூலம் அபராதம்விதிக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், உணவு தயாரிப்பு, விற்பனை, சேமிப்பு, விநியோகம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய பணிகளில் ஈடுபடுபவர்களின் ஆண்டு விற்றுமுதல் (டர்ன்ஓவர்) ரூ.12 லட்சத்துக்கு மேல் இருந்தால் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிமம் பெற வேண்டும்.

விற்றுமுதல் ரூ.12 லட்சத்துக்கு கீழ் இருக்கும் கடைகள், நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை மீறும் வணிகர்கள் மீது விசாரணை நடத்தி மாவட்ட வருவாய் அலுவலர் உரிய அபராதம் விதித்து வந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் பிரிவு 30 (3)-ன்படி ஆண்டுக்கு 12 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டும் உணவு வணிகர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்கு அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமனஅலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது, உணவுகள் தயாரித்து விற்பனை செய்யும் இடங்களை சுகாதாரமற்ற முறையில் வைத்திருப்பது, உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படம், அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் உணவு பொருட்களை மடித்து விற்பனை செய்வது உள்ளிட்ட சிறிய குற்றங்களில் 12 லட்சத்துக்கும் குறைவாக வருவாய்ஈட்டும் வணிகர்கள் முதன்முறையாக ஈடுபட்டால் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

வணிகர்களுக்கு சிரமம்

2-வது முறையும் அதே தவறைச்செய்தால் ரூ.2 ஆயிரம் முதல்ரூ.6 ஆயிரம், 3-வது முறை தவறுசெய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு சிறிய தவறாக இருந்தாலும் இதுவரை மாவட்ட வருவாய் அலுவலர்தான் விசாரணை நடத்திஅபராதங்களை விதித்து வந்தார். இதனால், வணிகர்களும் தங்களுடைய வியாபாரங்களை விட்டு விசாரணைக்கு அலைய வேண்டி யுள்ளது.

அதிக விசாரணைகளால் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கும் பணிச்சுமை ஏற்பட்டு வந்தது. இவற்றை கருத்தில் கொண்டு சிறிய குற்றங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர்கள் அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல்தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 318 உணவு வணிகர்களுக்கு ரூ.9 லட்சத்து 61 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 12 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் வணிகர்கள் மீது எப்போதும் போல் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி அபராதம் விதிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x