Published : 14 Feb 2020 08:24 AM
Last Updated : 14 Feb 2020 08:24 AM

பேனர் சரிந்த விபத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் சுபஸ்ரீயின் பெற்றோர் மாநகராட்சி ஆணையருடன் சந்திப்பு- ரூ.1 கோடி இழப்பீடு கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சாய்ந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மென்பொறியாளர் சுபஸ்ரீயின் பெற்றோர், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷை நேற்று சந்தித்தனர். ரூ.1 கோடி இழப்பீடு கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர்12-ம் தேதி அதிமுக பிரமுகர்ஜெயகோபாலின் இல்லத் திருமணத்துக்காக சாலையின் நடுவே பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு பேனர் காற்றில் சரிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில், 23 வயது மென்பொறியாளரான சுபஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கடமையை செய்யத்தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இடைக்கால நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையில், சுபஸ்ரீயின் தந்தை ஆர்.ரவி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,“எனது மகள் சுபஸ்ரீயின் மரணத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுஅமைக்க வேண்டும். சட்டவிரோதமாக ப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘சுபயின் இழப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவரது தந்தை அளித்துள்ள விண்ணப்பம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர், அவரை நேரில் வரவழைத்து ஆலோசித்து, 4 வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷின் அழைப்பின் பேரில், சுபஸ்ரீயின் தந்தை ஆர்.ரவி, தாய் கீதா, அவர்களது வழக்கறிஞர் கே.வி.முத்துவிசாகனுடன் சென்னை ரிப்பன் மாளிகைக்கு நேற்று வந்திருந்தனர். அவர்களிடம் நீண்ட நேரம் ஆணையர் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு கே.வி.முத்துவிசாகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சுபயின் தந்தை, தன் மகளின் மரணத்துக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அவர்களை அழைத்திருந்தார். சந்திப்பின்போது, சுபஸ்ரீயின் தந்தை எழுத்துப்பூர்வமாக தனது கோரிக்கையை கொடுத்தார். அப்பெண் படித்தது,வேலை செய்தது, அதன் மூலம்வருவாய் ஈட்டியது ஆகியவற்றுக்கான ஆவணங்களையும் கொடுத்துள்ளார். மேலும் ஜூம்பா நடனபயிற்சியாளராகவும் சுபஸ்ரீ இருந்துள்ளார். அதன் மூலமும் அவர் வருவாய் ஈட்டியுள்ளார். அதுகுறித்த ஆவணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது தங்களுக்கு ரூ.1 கோடிஇழப்பீடு வழங்கவேண்டும் என்பதில் சுபஸ்ரீயின் பெற்றோர் உறுதியாக இருந்தனர். அவர்களது கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசித்தபின் முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x