Published : 14 Feb 2020 08:21 AM
Last Updated : 14 Feb 2020 08:21 AM

கடன் வாங்கி வட்டி செலுத்தினால் தமிழக நிதி நிலைமை எப்படி மேம்படும்?- திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கேள்வி

சென்னை

கடன் வாங்கி வட்டி செலுத்தினால் தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி மேம்படும் என்று திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரும், எம்எல்ஏவுமான பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தியாகராஜன் பழனிவேல் நேற்று கூறியதாவது:

தமிழக அரசின் 2020-21-ம்ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த 9 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமடைந்துள்ளது. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. 2016 இறுதியில் ஜெயலலிதா மரணம் அடையும்போது கடன் சுமை ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது கடந்த 4 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான் அதிமுக அரசின் நிர்வாகத் திறமை.

திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதி, 100 சதவீதம் வருவாய் கணக்கில் இருந்துதான் செலவு செய்தார். வருவாய் கணக்கில் உபரியும் வைத்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அந்த அளவுக்கு நிதி மேலாண்மை செய்யவில்லை. ஆனாலும், 2014 வரை நன்றாகவே நிதி நிர்வாகம் செய்தார். ஜெயலலிதா பெங்களூரு சிறைக்குச் சென்ற பிறகு, 2 ஆண்டுகள் அவரது கண்காணிப்பு சரியாக இல்லாததால் நிதி நிலைமை மோசமானது.

ஆனால், இன்றைய அதிமுக அரசு ஒரு பைசாகூட வருவாய் கணக்கில் செலவு செய்வதில்லை. 100 சதவீதம் கடன் வாங்கியே குடும்ப அட்டைக்கு ரூ.1,000 உள்ளிட்ட இலவசங்களை மக்களுக்கு வழங்குகின்றனர். திமுக ஆட்சியில் வாங்கும் கடனை முழுமையாக முதலீட்டுக்கு பயன்படுத்தினர். அதனால் வளர்ச்சி இருந்தது. கடனும், வட்டியும் குறைந்தது. ஜெயலலிதா ஆட்சியில் வாங்கிய கடனில் 85 சதவீதத்தை முதலீட்டுக்கும், 15 சதவீதத்தை செலவுக்கும் பயன்படுத்தினார்.

ஆனால், இன்றைய அதிமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அதில் 60 சதவீதம் மட்டுமே முதலீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 22 சதவீதம் மக்கள் திட்டங்களுக்கானது. 18 சதவீத கடனை வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த பயன்படுத்தியுள்ளனர். இதுதான் அதிமுக ஆட்சியில் நிதி நிலைமை.

திமுக ஆட்சி முடியும்போது வட்டி செலவு ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி, ஜெயலலிதா ஆட்சியில் வட்டி செலவு ரூ.18 ஆயிரம் கோடி. ஆனால், இப்போது வட்டியாக ரூ.29 ஆயிரம் கோடி செலுத்தப்படுகிறது. இப்படிவாங்கும் கடனை வட்டியாக செலுத்தினால் தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி மேம்படும்? தமிழகம் நிதி மேலாண்மையில் பிஹார், உத்தரப்பிரதேச மாநிலத்தைவிட பின்தங்கியுள்ளது. தமிழக நிதி நிலைமையை மேம்படுத்த பொருளாதார வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x