குழந்தைகளிடம் இயல்பான வளர்ச்சியின்மையை அடையாளம் காண ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா தகவல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அமர் சேவா சங்கம் சார்பில் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியின்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பான பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இப்பயிலரங்கில், சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா, அமர் சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.படம்: க.பரத்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அமர் சேவா சங்கம் சார்பில் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியின்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பான பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இப்பயிலரங்கில், சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா, அமர் சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.படம்: க.பரத்
Updated on
1 min read

குழந்தைகளிடம் இயல்பான வளர்ச்சிஇன்மையை அடையாளம் காணும் திட்டத்தை செயல்படுத்த ரூ.2 கோடியே37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் செயல்படும் அமர் சேவா சங்கம் சார்பில் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியின்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பான பயிலரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்று மத்திய அரசிடம் இருந்து தமிழகம் ஏற்கெனவே விருது பெற்றுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.572 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்.

அமர் சேவா சங்கத்தின் மூலம் பரிசோதனை முறையில், பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளிடம் இயல்பான வளர்ச்சியின்மையை அடையாளம் காண அங்கன்வாடி, கிராமப்புற சுகாதார செவிலியர்கள், சமூக மறுவாழ்வு பணியாளர்கள் என 2,771 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர்களின் மூலம், திருநெல்வேலி, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்து யூனியன்களில் 15 ஆயிரம் குழந்தைகளை பரிசோதனை செய்ததில், 172 குழந்தைகளிடம் வளர்ச்சியின்மை அடையாளம் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இத்திட்டத்தை மேலும் 23 பஞ்சாயத்து யூனியன்களில் விரிவுபடுத்தி, வீட்டில் இருந்தபடியே குடும்பத்தினரின் பங்கேற்போடு குழந்தைகளின் வளர்ச்சியின்மையை அடையாளம் கண்டறிந்து குணப்படுத்தும் பணியை செய்ய ரூ.2 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகத்தில் சம வாய்ப்பை ஏற்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக, மாற்றுத்திறனாளி குழந்தைகளை வேறுபாடு காட்டாமல் பிற குழந்தைகளைப் போன்று பெற்றோர் வளர்க்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இப்பயிலரங்கில், அமர் சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக, குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியின்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறார். 2 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், குழந்தைகளை விளையாட்டில் பங்கேற்க வைப்பதன் மூலம் இயல்பான வளர்ச்சியின்மையைக் கண்டறிதல், அவர்களுக்கான கல்வி, சமூக பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in