Published : 14 Feb 2020 08:01 AM
Last Updated : 14 Feb 2020 08:01 AM

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை சரண்டர் செய்தால் முறையான ரசீது இன்றி துண்டுசீட்டில் ஒப்புகை: டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதில் சிக்கல்

சென்னை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி, இன்டர்நெட் இணைப்பை சரண்டர் செய்ய விண்ணப்பித்தால், அவர்களுக்கு முறையான ரசீது வழங்காமல் துண்டுச்சீட்டில் ஒப்புகை வழங்கப்படுகிறது. இதனால், வைப்புத் தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால், அந்நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ், பணி ஓய்வு பெற்றனர்.

இதனால், ஊழியர் பற்றாக்குறை காரணமாக அந்நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி, இணையதள சேவை உள்ளிட்ட சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளை ரத்து செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, வாடிக்கையாளர்கள் கூறும்போது, “பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியர் எண்ணிக்கை, முழு அளவில் இருந்தபோதே, அந்நிறுவனத்தின் சேவைமிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிஓய்வு பெற்றுச் சென்று விட்டதால்,பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவைபெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இதனால், நாங்கள் எங்களது தொலைபேசி, இணையதள இணைப்புகளை சரண்டர் செய்யமுடிவு செய்து, வீட்டு அருகில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்தால், அதற்கு முறையான ஒப்புகை சீட்டு வழங்குவதில்லை. ஒரு துண்டுச்சீட்டில் எழுதித் தருகின்றனர்.

நிரந்த ஊழியர்கள் பணியாற்றிய இடங்களில் தற்போது அயல்பணி மூலம் தனியார் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிறுவனத்தின் விதிமுறைகள் ஏதும் தெரியவில்லை.

இவ்வாறு துண்டுச்சீட்டில் எழுதித் தரும் ஒப்புகைச் சீட்டு தொலைந்து போனால், எப்படி மீண்டும் வைப்புத் தொகையைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்களும் உரிய பதில் அளிப்பதில்லை” என்றனர்.

இதுகுறித்து, பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது, “தொலைபேசி இணைப்புகளை சரண்டர் செய்ய வரும் வாடிக்கையாளர்களுக்கு துண்டுச் சீட்டில் எழுதித் தருவது மிகவும் தவறான விஷயம். குறைந்தபட்சம் அந்தச் சீட்டில் அலுவலக முத்திரை, சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையொப்பம் உள்ளிட்டவை இடம் பெற வேண்டும்.

தற்போது, பெரும்பாலான வாடிக்கையாளர் சேவை மையங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், சரண்டர் செய்யும் தொலைபேசி இணைப்பு குறித்த விவரம் உடனடியாக கணினியில் பதிவு செய்வதால், அவர்களுக்கு வைப்புத் தொகை திரும்பக் கிடைப்பதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x