Last Updated : 14 Feb, 2020 07:56 AM

 

Published : 14 Feb 2020 07:56 AM
Last Updated : 14 Feb 2020 07:56 AM

பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ரூ.800 கோடியில் 2 நவீன செயற்கை கோள்கள் தயாரிப்பு: மார்ச், ஜுன் மாதங்களில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

பருவநிலை கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இஸ்ரோ சார்பில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 2 அதிநவீன ஜியோ இமேஜிங் செயற்கைக் கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மார்ச், ஜூன் மாதங்களில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இவை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

நாட்டின் முக்கிய தேவைகளானதொலைத்தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே உலக அளவில் பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் புயல், கனமழை போன்ற வானிலை சார்ந்த இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் கடந்த காலத்தைவிட அதிகரித்து வருகின்றன.

இந்த சூழலில், வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக அதிநவீன வசதிகளுடன் ஜியோ இமேஜிங் வகையைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்களை (ஜிஐ சாட்) விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ கடந்த 2013-ல் முடிவுசெய்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட செயற்கைக் கோள் தயாரிப்பு பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவு பெற்றன.

இதையடுத்து, முதல்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிஐசாட்-1 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் எடை 2,300 கிலோ. ஆயுட்காலம் 7 ஆண்டுகள். பூமியில் இருந்து 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் புவிவட்டப் பாதையில் ஜிஐசாட்-1 நிலைநிறுத்தப்பட உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

கனமழை, வறட்சி, புயல், வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட வானிலை சார்ந்த இயற்கை சீற்றங்களால் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற பசிபிக் மற்றும் தெற்காசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய இயற்கை சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார சேதங்கள் பெரும் பின்னடைவை தருகின்றன. இந்த பேரிடர்களை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க செயற்கைக் கோள்களின் ஆய்வுப் படங்கள் வழிகாட்டுகின்றன.

அந்த வகையில் இஸ்ரோ தயாரித்து அனுப்பிய ‘கல்பனா’, ‘சாரல்’, ‘மேகா’, ‘ஓசோன்சாட்’, ‘ஸ்காட்சாட்’ மற்றும் சில ‘இன்சாட்’ வகை செயற்கைக் கோள்கள் தற்போது வானிலை ஆய்வு மற்றும் பேரிடர் கண்காணிப்புக்கு உதவுகின்றன. எனினும், பேரிடர் காலத்தின்போது இந்த செயற்கைக் கோள்களில் இருந்து தகவல்கள் பெறுவதில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்க, பருவநிலை மாற்றம் மற்றும் வானிலை தொடர்பான ஆய்வுப் படங்களை விரைவாக அனுப்பும் வகையில் ஜியோஇமேஜிங் (ஜிஐசாட்) வகையைச்சேர்ந்த 2 அதிநவீன செயற்கைக்கோள்கள் ரூ.800 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன.

துல்லியமாக படம் எடுக்கும்

இந்த வகை செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ள 5 விதமான 3டி கேமராக்கள், தொலைநோக்கிகள் மூலம் புவிப்பரப்பை 0.5 மீட்டர் முதல் 1.5 கி.மீ. வரையிலான சுற்றளவில் மிக துல்லியமாக படம் எடுக்க முடியும். இதில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆன்டெனா அதிகபட்ச படங்கள், தகவல்களை ஒருங்கிணைத்து விரைவாக அனுப்பவும், பெறவும் உதவியாக இருக்கும். ஜிஐசாட் புவியை சுற்றிவரும்போது 5 நிமிடத்துக்கு ஒருமுறை படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது.

முதல்கட்டமாக ஜிஐசாட்-1மார்ச் மாதமும், ஜிஐசாட்-2 ஜூன் மாதமும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளன. இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணித்து, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னும் கவனமாக மேற்கொள்ளவும், பேரிடர் மீட்பு பணிகளுக்கும் இவை பெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x