Published : 14 Feb 2020 07:37 AM
Last Updated : 14 Feb 2020 07:37 AM

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ முறைகேடு: இடைத்தரகராக செயல்பட்ட காவலர், அரசு ஊழியருக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் இடைத் தரகராக செயல்பட்ட காவலர் முத்துக் குமார் மற்றும் முறைகேடாக பணியில் சேர்ந்த செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் ஆனந்தன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குரூப் 4 பணி யிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், அரசு ஊழியர்கள், தேர்வு எழுதியவர் கள், இடைத்தரகர்கள், உடந்தையாக செயல்பட்டவர்கள் என பலரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீஸார், இந்த முறைகேட்டில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் மற்றும் காவலர் சித்தாண்டி உள்ளிட்ட 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் போலீஸாரால் தேடப்பட்ட ஜெயக்குமார் சென்னை எழும்பூர் நீதி மன்றத்தில் சரண் அடைந்தார். காவலர் சித்தாண்டியை ராமநாதபுரம் அருகே சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மேலும் முறைகேடாக குரூப் 2 ஏ தேர்வில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி யாளராக பணியாற்றிய வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவுத் துறைத் தலைவர் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி யாளராக பணிபுரிந்த ஆனந்தன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சி யாக மேலும் பல அரசு ஊழியர்கள் கைதாகி வருகின்றனர்.

குரூப் 2 ஏ தேர்வுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த காவலர் முத்துக் குமார், தனது மனைவி மகாலட்சுமியை குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாகத் தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து காவலர் முத்துக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் முத்துக்குமார், குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி 7 பேரிடம் ரூ. 40 லட்சம் வசூலித்ததாகவும், தனது மனைவிக்கு வருவாய்த் துறை யிலும், தனது தம்பிகளை விஏஓ தேர் விலும் தேர்ச்சி பெறவைத்து அரசு வேலை பெற்றுக் கொடுத்ததாகவும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இதேபோல குரூப் 2 ஏ தேர்வில் காவலர் ஒருவர் மூலமாக ரூ. 13 லட்சம் கொடுத்து செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிக் குச் சேர்ந்த ஆனந்தனையும் போலீ ஸார் கைது செய்துள்ளனர். முத்துக் குமார் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வக்குமார், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x