Published : 13 Feb 2020 05:00 PM
Last Updated : 13 Feb 2020 05:00 PM

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை திரும்ப பெறுக: கே.பாலகிருஷ்ணன்

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு பாஜக வந்த நாள் முதலாய், விலைவாசி உயர்வு என்பது அன்றாட செய்தியாகி வருகிறது. இந்நிலையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 12-ம் தேதி முதல் ரூ. 147 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் எரிவாயு உருளை ரூ. 734-லிருந்து ரூ. 147 உயர்த்தப்பட்டு தற்போதைய விலை ரூ. 881-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆகஸ்ட் 19 முதல் தொடர்ந்து 6-வது முறையாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. புத்தாண்டு பரிசாக 2020 ஜனவரி 1-ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலை ரூ.19 உயர்த்தப்பட்டது.

சமீபத்திய மத்திய அரசின் பட்ஜெட்டில், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் சார்ந்து எவ்வித திட்டமோ, சலுகைகளோ அறிவிக்காமல் வார்த்தை ஜாலங்களுடன் நீண்ட உரை நிகழ்த்தி, நெடிய துயரத்தை நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்திற்குண்டான வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் குறித்து இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில் திடீரென்று ரூ. 147 விலை உயர்வு என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், கோப அதிர்வுகளையும் உருவாக்கியுள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் விளைவாகவும், பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகளை அள்ளி தருவதன் காரணமாக, சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகளை ஏற்றி வாட்டி வதைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்

சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் மானியமில்லாத சிலிண்டர் விலை கடும் உயர்வு: இன்று முதல் அமல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x