

கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகரில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இன்று முதல் ஈடுபடுகின்றனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு, பிப்ரவரி 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவை குண்டுவெடிப்பு நினைவு தினத்தையொட்டி, கோவை மாநகரில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் இன்று (பிப்.13) மாலை முதல் ஈடுபட உள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், 2 டிஐஜிக்கள், 4 துணை ஆணையர்கள், 8 மாவட்ட எஸ்.பி.க்கள், மாநகர மற்றும் 8 மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸார், கமாண்டோ பிரிவு போலீஸார், அதிவிரைவுப்படை போலீஸார் என மொத்தம் 5 ஆயிரம் போலீஸார் கோவை மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
முக்கிய இடங்களில் இவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தவிர, ஆர்.எஸ்.புரத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, மற்றும் பேரணி நடைபெற உள்ளது. இதில் இந்து அமைப்புகளைச் சார்ந்த ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இங்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி நேற்று இரவு கோவைக்கு வந்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மதியம் திருப்பூருக்குச் சென்றுள்ளார். இன்று மாலை மீண்டும் கோவை வரும் அவர், பாதுகாப்புப் பணிகள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தவறவிடாதீர்!