ரூ.55 ஆயிரம் கோடி கல்விக் கடனை மொத்தமாக தள்ளுபடி செய்யக் கோரி வழக்கு: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி

ரூ.55 ஆயிரம் கோடி கல்விக் கடனை மொத்தமாக தள்ளுபடி செய்யக் கோரி வழக்கு: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி
Updated on
1 min read

இந்தியா முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் ரூ.55 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்யக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "இந்தியாவில் வாராக் கடன் ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

அரசியல் தொடர்பு காரணமாக தொழிலதிபர்களுக்கு அளித்த கடனை திரும்ப வசூலிக்க வங்கிகள் அக்கறை காட்டுவதில்லை. சில நேரங்களில் கடன்கள் தள்ளுபடியும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை திரும்ப வசூலிக்க வங்கிகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடனை பொருத்தமட்டில் மொத்தம் ரூ.55 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த கடன் வாங்கியவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என்பதால் கடனைத் திரும்ப வசூலிக்க வங்கிகள் சார்பில் சட்டத்துக்கு புறம்பாகக் கடுமை காட்டப்படுகிறது.

எனவே, மாணவ, மாணவிகள் உயர்க்ல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்பட்ட கல்விக் கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடனைத் திரும்பச் செலுத்தாத பன்னாட்டு நிறுவனங்கள், தொழிலதிபர்களின் பட்டியலை ஊடகங்களில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் அமர்வு இன்று விசாரித்தது.

பின்னர் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்தப்பணத்தை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in