Published : 13 Feb 2020 12:52 PM
Last Updated : 13 Feb 2020 12:52 PM

கலைஞர் பாணியில் அஞ்சாமை: புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஸ்டாலின் வாழ்த்து

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக துணைநிலை ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய உங்கள் அஞ்சாமையைப் பாராட்டுகிறேன் என புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சிஏஏ எனும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி கடுமையாக அதை எதிர்த்து வருகிறது. கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில் புதுவையில் ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பை மீறி, நேற்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாகப் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, "அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை, நாங்கள் ஏற்க மாட்டோம். புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானவை" என்று பேசினார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது முகநூல் பதிவு:

“வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி இருப்பதன் மூலம், புதுவை வரலாற்றில் புரட்சிகரமான இடத்தைப் பிடித்துவிட்டார் முதல்வர் நாராயணசாமி.

புதுவை துணைநிலை ஆளுநரின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளி, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானம்- சமூக நீதியைக் காப்பாற்றும் இட ஒதுக்கீடு தீர்மானம் ஆகிய முக்கியமான தீர்மானங்களை, சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளார்.

இதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி போன்ற உயர்ந்த கோட்பாடுகளின் மீது, தனக்கு இருக்கும் ஆழ்ந்த பற்றுதலைக் கம்பீரமான முறையில் வெளிக்காட்டியிருக்கிறார் புதுவை முதல்வர்.

“இதற்காக எனது ஆட்சியே போனாலும் கவலை இல்லை”என்று, தலைவர் கலைஞர் பாணியில் அவர் கொண்டிருக்கும் அஞ்சாமையை, மனமாரப் பாராட்டி, வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x