மதுவிலக்கு கோரி 3-வது நாளாக உண்ணாவிரதம்: மாற்றுத் திறனாளிகளுடன் ஸ்டாலின், வாசன் சந்திப்பு

மதுவிலக்கு கோரி 3-வது நாளாக உண்ணாவிரதம்: மாற்றுத் திறனாளிகளுடன் ஸ்டாலின், வாசன் சந்திப்பு
Updated on
1 min read

மதுவிலக்கு கோரி 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாற்றுத் திறனாளிகளை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், கனிமொழி எம்.பி. ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மதுவிலக்கை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் மாற்றுத் திறனாளிகளை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட்டு, மாற்று வழியில் போராடுமாறு கேட்டுக்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘மாற்றுத்திறனாளிகள் என்றுகூட பார்க்காமல் அவர்களை வாகனத்தில் ஏற்றிவந்து பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளனர். மதுவிலக்கு கோரிக்கையை ஏற்கும் நிலையில் அதிமுக அரசு இல்லை. எனவே, உண்ணாவிரதத்தை கைவிட்டு மாற்று வழியில் போராடுமாறு திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வேண்டுகோள் விடுத்தேன். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை’’ என்றார்.

ஜி.கே.வாசன் கூறும்போது, ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களின் போராட்டங்களை மதிக்க வேண்டும். ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கவோ, தடுக்கவோ கூடாது. மதுவிலக்கு என்பது அரசியல் பிரச்சினை அல்ல. சமுதாய பிரச்சினை. எனவே, அதற்காக போராடுபவர்களை கைது செய்வதை மக்கள் விரும்பமாட்டார்கள். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

‘தி இந்து’விடம் பேசிய டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக், ‘‘எங்களை சந்திக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு மாற்று வழியில் போராடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து எங்கள் அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசித்து போராட்டத்தை கைவிடுவதா அல்லது தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்வோம்’’ என்றார்.

வாசன் - கனிமொழி சந்திப்பு

மாற்றுத்திறனாளிகளுடன் தரையில் அமர்ந்து வாசன் பேசிக் கொண்டிருந்தபோது கனிமொழி அங்கு வந்தார். கனிமொழியை வரவேற்ற வாசன், அவரிடம் உடல்நலம் விசாரித்தார். இருவரும் ஓரிரு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் வாசன் புறப்பட்டுச் சென்றதும், மாற்றுத்திறனாளிகளிடம் போராட்டம் குறித்து கனிமொழி விசாரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in