

கால் நூற்றாண்டுக்கும் மேலாக திருச்சி மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேரு, அண்மையில் திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால் உள்ளூர் அரசியலில் இருந்து விடுபட்டு, சென்னையிலுள்ள அறிவாலயத்தில் இருந்தபடி கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த ஜன.30-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற திமுகவின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான மாநாட்டில் கே.என்.நேருவின் மகன் அருண், மேடையில் ஏறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்றார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து கைகுலுக்கிப் பேசினார்.
கட்சி நிகழ்ச்சிகளில் வெளிப்படையாக பங்கேற்பதை தவிர்த்து வந்த என்.அருண், இந்த மாநாட்டு மேடையில் தோன்றியது திமுகவினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத் தியது.
இந்நிலையில், திருச்சி தில்லை நகரிலுள்ள திமுக அலுவலகத்துக்கு நேற்று அருண் வந்தார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் திருவெறும்பூரில் நடைபெற்ற திமுக பிரமுகர்களின் இல்ல விழாக்களில் பங்கேற்க கட்சியினருடன் சென்றார்.
அங்கு மேளதாளம் முழங்க அருணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவரது படத்துடன் கூடிய போஸ்டர்கள் வழிநெடுகிலும் ஒட்டப்பட்டிருந்தன, பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இது, திமுகவினரிடம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
சென்னையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அருண், இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். தன் மகன் அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கே.என்.நேரு உறுதியாக இருந்ததால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அருணை களமிறக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ஆதரவாளர்கள் மூலம் திருச்சி அரசியலை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள கே.என்.நேரு முயன்றும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
அண்மையில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சிலர், கே.என்.நேருவின் புகைப் படத்தைத் தவிர்த்துவிட்டு மகேஷ் பொய்யாமொழியின் படத்துடன் கூடிய போஸ்டரை தில்லை நகரிலுள்ள திமுக அலுவலகத்தின் அருகில் ஒட்டியிருந்தனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளில் பலர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களாக இருப்பதால் அவர்களை விட்டுவிட்டு, இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் மகேஷ் பொய்யாமொழி தரப்பினர் தீவிரமாக உள்ளனர்.
இதையறிந்த நிர்வாகிகளில் சிலர், அருணை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும் கே.என்.நேரு எந்த பதிலும் சொல்லாத நிலையில், கட்சி அலுவலகத்துக்கு அருண் வந்தது, நிர்வாகிகளுடன் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போன்றவை எங்களுக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது என்றனர்.
இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கே.என்.நேரு சென்னையில் இருப்பதால், கட்சியினர் இல்ல விழாக்களுக்கு தனக்குப் பதிலாக மகனை அனுப்பி வைத்துள்ளார். இதில் உள்நோக்கம் ஏதுமில்லை என்றாலும் அருண் விஷயத்தில் கே.என்.நேரு என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது போகப் போகத்தான் தெரியும்” என்றனர்.
இதற்கிடையே, திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வகித்துவரும் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவி அருணுக்கு வழங்கப்படலாம் எனவும் கட்சியினர் மத்தியில் பேச்சு உலவுகிறது.