Published : 13 Feb 2020 11:02 AM
Last Updated : 13 Feb 2020 11:02 AM

7 தமிழர் விடுதலை: உச்ச நீதிமன்றத்தின் உணர்வை ஆளுநர் மதிக்க வேண்டும்; ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.13) வெளியிட்ட அறிக்கையில், "பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், மகிழ்ச்சியான முடிவை நோக்கிப் பயணிப்பதை உறுதிப்படுத்தியுள்ளன. 29 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களையும் காலவரையின்றி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்க முடியாது என்பது தான் உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வாகும்.

பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "7 தமிழர்களை விடுதலை செய்யப் பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் என்ன? இது குறித்து தமிழக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பாதது ஏன்?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தக் கேள்விகள் தமிழக அரசை நோக்கி எழுப்பப்பட்டவை அல்ல... மாறாக, ஆளுநருக்காக எழுப்பப்பட்டவை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதுதான் உண்மை.

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ஆளுநரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுநருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால்தான், ஆளுநரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் ஆளுநருக்கு மற்றொரு உண்மையையும் நீதிபதிகள் உணர்த்தியுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரைகள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், இதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அழுத்தம் திருத்தமாக தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உணர்வை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புரிந்துகொள்ள வேண்டும்.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில்தான் 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானம் செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும்.

ஆனால், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 522 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று வரை அதன் மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்கவில்லை. அவ்வாறு முடிவெடுக்காமல் இருப்பதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இன்று வரை வெளியிடப்படவில்லை.

7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், அதற்கும் கூடுதலாக 29 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில்தான், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

அவர்களை விடுதலை செய்ய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கு ஆதரவாக இவ்வளவு நியாயங்கள் உள்ளன.

அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது. கடந்த காலங்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதம் செய்ததால், அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. தமிழக ஆளுநரின் காலவரையற்ற தாமதமும் அத்தகையதொரு சூழலுக்கு தான் அழைத்துச் செல்லும்.

எனவே, ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்யாமல் அரசியலமைப்புச் சட்டப்படியான அவரது கடமையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்படி ஆளுநருக்கு தமிழக அரசு நினைவூட்ட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!

நளினி சிறையில் இருப்பது சட்டப்பூர்வமாகவா? அல்லது சட்டவிரோதமாகவா?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா பாதிப்பு: ஜப்பான் கப்பலில் சிக்கியுள்ள 6 தமிழர்களை இந்திய அரசு மீட்க வேண்டும்; ஜி.கே.வாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x