Published : 13 Feb 2020 10:08 AM
Last Updated : 13 Feb 2020 10:08 AM

கரோனா வைரஸ் பாதிப்பு; ஜப்பான் கப்பலில் உள்ள தமிழர்களை மத்திய அரசு மீட்க வேண்டும்: ராமதாஸ்

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் உள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பல் ஹாங்காங்குக்கு சென்று விட்டு, கடந்த 3-ம் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகருக்குத் திரும்பியது. முன்னதாக, ஹாங்காங்கில் இந்தக் கப்பலில் இருந்து இறங்கிய 80 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானதால், அக்கப்பலில் இருப்போர் ஜப்பானுக்குள் அனுமதிக்கப்படவில்லை. யோகோஹாமா துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டு அக்கப்பலில் உள்ள 3,000-க்கும் மேற்பட்டோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்தக் கப்பலில் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இக்கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 100 இந்தியர்கள் உள்ளனர். இந்நிலையில், அக்கப்பலில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (பிப்.13) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் கரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!

கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

ஜப்பான் கப்பலில் உள்ள தமிழரை மீட்க வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு: வெறும் கானல் நீரா? - வைகோ கேள்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x