

நாகர்கோவிலில் நூதனமுறையில் பணம் திருடியதாக ஈரான் நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் டேவிட் என்பவர் மின்சாதனங்கள் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் மாலை காரில் வந்த வெளிநாட்டு இளைஞர்கள் 2 பேர், 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து 500 ரூபாய் நோட்டு தருமாறு கேட்டுள்ளனர்.
அவரும் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். டேவிட் பணத்தை எண்ணிய நேரத்தில், கடையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு இருவரும் வெளியேறினர்.
பின்னர், பணம் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டேவிட், ஆசாரிபள்ளம் போலீஸில் புகார் அளித்தார். இதற்கிடையே, செல்வகுமார் என்பவரும் வெளிநாட்டு இளைஞர்கள் 2 பேர், தம்மிடம் ரூ.10 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பியதாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
ஈத்தாமொழி பகுதியில் வந்த மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு காரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, அதில் இருந்தவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் மெய்சம், ரேசா என்பது தெரியவந்தது.
சுற்றுலா விசாவில் இந்தியாவந்துள்ள அவர்கள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்றதோடு, அங்கெல்லாம் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நூதன முறையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை பணம் பறித்தது தெரியவந்தது.
அவர்களது காரில் கட்டுக்கட்டாக இருந்த ஈரான் நாட்டு பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவரும், பிற மாநிலங்களில் எங்கெல்லாம் திருட்டில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.