Published : 13 Feb 2020 08:34 AM
Last Updated : 13 Feb 2020 08:34 AM

அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

இனிவரும் காலங்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் 14-வது பொது நிழல் பட்ஜெட் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றுநடந்தது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். பாமக தலைவர் ஜி.கே.மணி, மாநில இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி அமைப்பாளர் தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

நாங்கள் கூறும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதற்காக நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு வருகிறோம். எங்களைப் போன்று இந்தியாவில் வேறு எந்த கட்சியும் இதுபோன்ற நிழல் பட்ஜெட் வெளியிடுவது இல்லை.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்த விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை சரியான திசையில் செல்வதால் அரசியல் கட்சியினருக்கு தொடர்பு இருக்காது.

அறிவுப் பஞ்சம் இருப்பதால்தான் பிரசாந்த் கிஷோரை பணம்கொடுத்து திமுக வாங்கியிருக்கிறது. அறிவுப் பஞ்சம் உள்ளிட்ட பல்வேறு வறட்சியை சரி செய்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பிரசாந்த் கிஷோர் அழைக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இணையும்போது 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதும் ஒன்று. எங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தற்போதுவரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணியிலேயே இருப்போம். வரும் காலங்களிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். ரஜினிகாந்த் கட்சி பற்றிய பேச்சுக்கு இடமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் அம்சங்கள்

பொது நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். தமிழகத்தை உயர்கல்வி மையமாக மாற்றதிட்டமிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை பெருக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை உதவித் தொகை, ஏழைக் குடும்பங்களுக்கு மாதம்ரூ.2,500 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி முதல் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசைவலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிக் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் கைவிடப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் உடனடியாக மூடப்படும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x