Published : 13 Feb 2020 08:32 AM
Last Updated : 13 Feb 2020 08:32 AM

சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்; புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு

தமிழக அரசின் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஜன.9-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. தமிழக அரசின் 2020-21-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பேரவையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் அறிவிப்பு 2021 மார்ச்சில் வெளியிடப்படலாம் என்பதால், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசால் அளிக்க முடியும். எனவே, இந்தஆண்டு அளிக்கப்படும் பட்ஜெட்டேமுழுமையானதாக இருக்கும். வரும் ஏப்ரல் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தடுத்து வருவதால் மக்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் பலபுதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்து 117 கோடியே 11 லட்சத்துக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 400 கோடியாக இருக்கும் என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 438 கோடியே 51 லட்சத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கடந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டிருந்தது. இதை ஒட்டியே இந்த ஆண்டு பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பசுமை எரிசக்தியை மேம்படுத்த தேனி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ரூ.1,125 கோடியில் 250 மெகாவாட் திறன் கொண்ட மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள் உள்ளிட்ட சிலதிட்டங்கள் தவிர கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்களை கவரும் வகையில் சலுகைகள், அறிவிப்புகள் இடம்பெறக் கூடும். காவிரி டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கைஅரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப் படையில் அரசு முக்கியமுடிவு எடுக்கலாம் என கூறப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தாவிட்டாலும், அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குதல், அரசின் பங்களிப்பை அதிகரித்தல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், அரசுப் பள்ளி களை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும், அனைத்து குடும்பங்களுக்குமான சிறப்பு திட்டம் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x