

ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த மேலும் 2 பைனான்சியர்களை வேப்பேரி போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரி காவல் நிலையத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் போனில் தொடர்புகொண்ட ஒருவர், சென்னையில் ஆன்லைன் முறையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகவும், அதில் தனது உறவினர் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார். மேலும் சென்னை சூளை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அலுவலகம் இதற்கு மையமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூளை நெடுஞ்சாலை பகுதியில் செயல்பட்ட கிரிக்கெட் சூதாட்ட அலுவலகத்தில் அப்போது சோதனை நடத்தினர். சோதனையின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சுமார் ரூ.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த 6 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 6 மாதமாக இவர்கள் இருவரும் இடத்தை மாற்றி, மாற்றி அலுவலகம் அமைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெய்சா (22) என்பவர் கடந்த 8-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த பைனான்சியர்கள் அக்சய் (26), அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம் (29) ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.