Published : 13 Feb 2020 08:17 AM
Last Updated : 13 Feb 2020 08:17 AM

அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கம் மாணவர்களின் அறிவாற்றலை பெருக்கும்: தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் அறிவுரை

‘கிளப்ஃபெஸ்ட்-2020’ என்ற விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற (இடமிருந்து) அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அஞ்சல் தலைவர் வி.கனகராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் (பொறுப்பு) சுமதி ரவிச்சந்திரன், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தின் தலைவர் ஜி.அமர்சந்த், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் மற்றும் அஞ்சல் சேவை இயக்குனர் ஏ.கோவிந்தராஜன்.படம்: எல்.சீனிவாசன்

சென்னை

அஞ்சல் தலைகளை சேகரிப்பதன் மூலம், மாணவர்களின் அறிவாற்றல் பெருகுவதோடு, வாழ்க்கையும் மேம்படும் என தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் சம்பத் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களிடையே அஞ்சல்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், ‘கிளப்ஃபெஸ்ட்-2020’ என்ற விழா, அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அஞ்சல் சேவை இயக்குநர் ஏ.கோவிந்தராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் பேசும்போது, ‘‘பள்ளி மாணவர்கள் அஞ்சல் தலைகளை சேகரித்து, அவற்றைப் படிப்பதன் மூலம் அவர்களது அறிவாற்றல் வளரும். அஞ்சல் தலை சேகரிப்பில் மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கில் இந்தக் கிளப்தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்களும், மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த கிளப்ஃபெஸ்ட் விழா ஒரு மாதம் நடைபெறும். அஞ்சல்தலை சேகரிப்பு தொடர்பாக தமிழகம் முழுவதும் 270 பள்ளிகளில் கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், 160 கிளப்புகள் சென்னையில் உள்ளன. இந்தக் கிளப்புகளை சேர்ந்த மாணவர்கள் தங்களது அஞ்சல் தலை சேகரிப்புகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.

சிறந்த மாணவர்களுக்கு பரிசு

முன்னதாக, சிறப்பு அஞ்சல் உறையை அவர் வெளியிட்டார். அஞ்சல் தலை சேகரிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் (பொறுப்பு) சுமதி ரவிச்சந்திரன், அண்ணாசாலை தலைமை அஞ்சல் துறை தலைவர் வி.கனகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x