சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த வரலாற்று ஆர்வலர்கள்: புராதன கோயில்களில் தேடல் பயணம்

உத்திரமேரூரில் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து வரலாற்று தேடல் பயணம் மேற்கொண்ட குழுவினர்.
உத்திரமேரூரில் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்து வரலாற்று தேடல் பயணம் மேற்கொண்ட குழுவினர்.
Updated on
1 min read

உத்திரமேரூரில் சமூக வலை தளங்கள் மூலம் ஒன்றிணைந்த வரலாற்று ஆர்வலர்கள் உத்திர மேரூர் பகுதியில் உள்ள புராதன கோயில்களில் வரலாற்று தேடல் பயணங்களை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மற்றும் ஐந்திணை காப்போம் குழு ஆகியவை இணைந்து புராதன கோயில்களில் வரலாற்று தேடல் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில்தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வரலாற்று ஆர்வலர்கள், சமூக வலைதளங்கள் மூலம்ஒன்றிணைந்த ஆண்கள், பெண் கள், மாணவர்கள் என 72 பேர் கொண்ட குழுவினர் இந்த பயணத்தில் இடம் பெற்றனர்.

உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தொடங்கிய இவர்களின் பயணத்தை உத்திர மேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜி தொடங்கி வைத்தார். இவர்கள் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டை படித்து சோழர் கால குடவோலை முறை, அந்தக்கால தேர்தல் முறை, வேட்பாளரின் தகுதிகள், தேர்தலில் நிற்க தகுதியற்றவர்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பல்லவர்காலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள தகவல்களை சேகரித்துக் கொண்டனர்.

இதேபோல் கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று, சோழர்கள் காலத்தில் கோயில்களுக்கு அளித்த நன்கொடைகளையும் கோயில்களை பராமரித்த விதம் குறித்தும் கல்வெட்டுகள் பற்றியும் தெரிந்து கொண்டனர்.

பின்பு ஊரின் வடக்குப் பக்கம் உள்ள ‘வடவாயிற் செல்வி’ என்று அழைக்கப்படும் துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று அங்குள்ள பழமையான முற்கால பல்லவர்களின் கொற்றவை தேவி சிலையையும், பல்லவர் கால அரிய வகை அரையடி உயரமுள்ள சிற்பத் தொகுப்புகளையும் கண்டு ரசித்தனர்.

பின்பு அங்கிருந்து 3 ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடல் கிராமத்துக்கு சென்று அப்பன் வெங்கடேச பெருமாள் கோயிலில் இயங்கிய ஆதூரசாலை எனப்படும் மருத்துவமனை மற்றும் வைத்திய முறைக்கு பயன்பட்ட மூலிகைக் குறிப்புகளை தெரிவிக்கும் வீரராஜேந்திர சோழர் கால கல்வெட்டுகளை பார்வையிட்டு மருத்துவம் குறித்த வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்டனர். இந்த தகவல்களை கட்டிடக் கலை நிபுணரும் தொல்லியல் துறை அறிஞருமான மதுசூதனன் குழுவினருக்கு விளக்கிக் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் உத்திரமேரூர் வரலாற்று சிறப்புகளை குறிக்கும் புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் முடிவில் ஐந்திணை காப்போம் குழு ஒருங்கிணைப்பாளர் சண் முகப்பிரியன் நன்றி கூறினார்.

இளைய தலைமுறையினர் கடந்த கால வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த வரலாற்று மரபு நடை பயணங்கள் நடைபெற்றதாக இந்தக் குழுவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in