

திமுக மாவட்டச் செயலாளராக கோலோச்சிய கே.என்.நேருவை முதன்மைச் செயலாளராக்கி டம்மியாக்கி விட்டதாக திருச்சி திமுகவில் ஒரு சலசலப்பு இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினெட் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துவிட்டதாக இன்னொரு தரப்பு டமாரம் அடிக்கிறது. திருச்சி திமுகவை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் நேரு எதுவாக இருந்தாலும் ஸ்டாலினிடமே நேரடியாகப் பேசிவிடுவார். இதில் வீட்டுக்குள் சிலருக்கு உறுத்தல். அதேபோல், உதயநிதி ஸ்டாலின் அரசியல் அரிதாரம் பூசும்வரைக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஸ்டாலின் குடும்பம்தான் வளர்த்தெடுத்தது. இன்றைய தேதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எல்லாமுமாக இருக்கிறார் மகேஷ். உதயநிதி செல்லும் இடங்களில் அவருக்கு என்ன மரியாதை நடக்கிறதோ அதற்கு நிகரான மரியாதை மகேஷுக்கும் தரப்படுகிறது. உதயநிதியும் எதுவாக இருந்தாலும் மகேஷைக் கேட்டுத்தான் செய்கிறார். கட்சிக்காரர்கள்கூட மகேஷ் மூலமாகத்தான் உதயநிதியிடம் பேசமுடிகிறதாம். இப்படியே போனால் உதயநிதி தனிப்பெரும் தலைவராக உருவெடுக்க முடியாது என கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்கள், மகேஷ் பொய்யாமொழியை திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அறிவித்து அவரை மாவட்ட அரசியலுக்குள் முடக்கிவிட்டார்கள். இனிமேல், உதயநிதி செல்லும் இடமெல்லாம் மகேஷ் செல்லமுடியாது. ஆக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்துவிட்டது கிச்சன் கேபினெட். கூடிய சீக்கிரமே மகேஷிடம் உள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவிக்கும் ஆபத்து வந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 16,2020)