Published : 12 Feb 2020 05:52 PM
Last Updated : 12 Feb 2020 05:52 PM

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படாததற்கு முழு பொறுப்பும் அதிமுக அரசுதான்: வேல்முருகன் விமர்சனம்

வேல்முருகன்: கோப்புப்படம்

சென்னை

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்படாததற்கான முழு பொறுப்பும் அதிமுக அரசையே சாரும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, வேல்முருகன் இன்று (பிப்.12) வெளியிட்ட அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 161-ன்படி 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆளுநரோ ஒன்றரை ஆண்டுகளாக அதில் கையெழுத்திடவில்லை, திருப்பியும் அனுப்பவில்லை. தமிழகமே இதற்கு எதிராக அறவழிகள் பலவற்றில் எதிர்வினையாற்றியும், அதையெல்லாம்கூட ஆளுநர் கண்டுகொள்ளவேயில்லை.

இந்நிலையில், பேரறிவாளன் மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வுக்கு முன் வந்தது. அப்போது 7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன் ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அதிமுக அரசின் வழக்கறிஞர், "ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் மீது இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது" என்றார்.

நீதிபதி உடனே, "தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் முறையிட்டு பதிலைப் பெற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம் இப்படி அறிவுறுத்தியதைப் பார்க்கும்போது, அந்த 7 பேர் விடுதலை செய்யப்படாததற்கான முழு பொறுப்பும் அதிமுக அரசையே சாரும் என்பதே தெளிவாகிறது. அதிமுக அரசு தான் அனுப்பிய தீர்மானத்தில் கையெழுத்திடாத ஆளுநரைச் சந்தித்து, கையெழுத்திடுமாறு அழுத்தம் கொடுக்கவுமில்லை; 6 மாதம் கழித்து அடுத்து ஒரு தீர்மானத்தை அனுப்பி சட்டப்படி அதில் கையெழுத்திட வைக்கவுமில்லை.

அதிமுக அரசு ஏன் அப்படிச் செய்யவில்லை என்பதற்கான காரணம் வெளிப்படை! வேறென்ன, பாஜகவின் கட்டளைதான்! இப்போதும் உச்ச நீதிமன்றம் கெடு எதையும் விதிக்காததால் அதன் அறிவுறுத்தலை எவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்றும் அதிமுக அரசு என்பதும் ஒரு கேள்வியாகிறது.

நாம் வேண்டுவதெல்லாம், அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்திற்கு நல்ல பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்பதோடு; பாஜக தனக்கு எஜமான் அல்ல என்று பகிரங்கமாக அறிவிக்கும் பொருட்டு, 7 பேர் விடுதலை விவகாரத்திலும் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, 7 பேர் விடுதலை செய்யப்படாததற்கு அதிமுக அரசே முழு பொறுப்பு என்பதற்கு தன் கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேநேரம், அந்தப் பழியைத் துடைக்கும் வண்ணம், அடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி, சட்டப்படி ஆளுநரைக் கையெழுத்திட வைத்து 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x