

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டி அருகே கோம்பை கிராமப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயியை யானை மிதித்துக் கொன்றது.
அடுத்தடுத்து யானைகளால் இப்பகுதியில் விவசாயிகள் உயிரிழப்பது இப்பகுதியில் தோட்டம் வைத்துள்ளவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பண்ணைப்பட்டி அருகே கோம்பை கிராமம் உள்ளது.
மலையடிவாரத்தில் உள்ள இக்கிராமத்தின் விளைநிலப்பகுதிக்கு அவ்வப்போது காட்டுயானைகள் வந்து செல்கின்றன. கடந்த மாதத்தில் இதுபோன்று காட்டுயானைகள் விளைநிலப்பகுதிக்குள் வந்து விவசாயி ஒருவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கைவிடுத்துவந்தனர். இந்நிலையில் கோம்பை கிராமத்தில் விவசாயி வெள்ளையப்பன் தனக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள கூரைவீட்டில் நேற்று தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். நேற்றிரவு தோட்டப்பகுதிக்கு வந்த காட்டுயானை ஒன்று கூரையை சேதப்படுத்தி உள்ளே தூங்கிக்கொண்டிருந்த வெள்ளையப்பனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த வெள்ளையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை தோட்டவேலைக்கு அந்த வழியே சென்றவர்கள் வெள்ளையப்பன் இறந்துகிடந்ததைபார்த்து போலீஸாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கன்னிவாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்தடுத்து யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழப்பது, இப்பகுதியில் தோட்டம் வைத்துள்ளவர்கள் மற்றும் கூலிவேலைக்கு செல்லும் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.