

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ராதாபுரம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இரண்டு தினங்களுக்கு முன்னதாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக கைதான நபர் என்னுடன் இருக்கும் புகைப்படம் குறித்துப் பேசியுள்ளார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஐயப்பன் என்பவர் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருடன் நானும் புகைப்படத்தில் இருப்பதைக் காட்டி முறைகேட்டில் திமுக தலையீடு இருப்பதாக அவர் செய்தியைப் பரப்பி இருக்கிறார்.
ஐயப்பன் என்பவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் அவர் எடுத்த புகைப்படத்தை வைத்து இப்படிச் சொல்வது சரியா? எனது அரசியல் பயணத்தில் நான் தவறை தட்டிக் கேட்பேனே தவிர தவறுக்கு ஒருபோதும் துணை போனது கிடையாது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு பிரச்சினையை திசைதிருப்பவே திமுக மீது பழி சொல்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் தன்னைப்போல் பிறரை நினைக்கக்கூடாது.
இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றும் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தான் நான் உள்ளேன். 98 வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தோம். நான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழில் இன்பத்துரையும் கையெழுத்திட்டு இருக்கிறார். ஆனால் தீர்ப்பை வெளியிடப்படாமல் நீதிமன்றத்தில் உள்ளது.
எந்த அமைச்சர் வீட்டிலாவது பணம் எண்ணும் இயந்திரம் இல்லாமல் இருக்கிறதா? இந்த ஆட்சியில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு பல லட்சம் கொடுத்து சுமார் 15 லட்சம் வரை கொடுத்து இட மாறுதல் பெறும் சூழல் இருக்கிறது.
இனி இந்த ஆட்சியில் அரசுப் பணியாளர் ஆணையம் மூலம் தேர்வு நடைபெற்றால் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தான் நடைபெற வேண்டும். அப்போதுதான் தேர்வு நேர்மையாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன் திமுக மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஆகியோர் உடனிருந்தனர்.